Category: அரசியல்

  • த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழகத்தில் ஆளும் த.வெ.க., கட்சியில் இணைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை, மதராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை மே 25ல் ராஜினாமா செய்தனர்.
    இவர்களை தொடர்ந்து அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த ஜூன் 16 மற்றும் 29ல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
    சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க., கொறடா உத்தரவை மீறி, ஆறு பேரும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்தனர்.
    இதன் காரணமாக ஆறு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த நிலையில், த.வெ.க., கட்சியில் இணைந்தனர்.
    இதில், மரகதம் குமாரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் கடந்த அக்., 6ல் நடந்த இடைத்தேர்தலில் அதே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளனர்.
    முன்னதாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் சுதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    அதில், ‘எம்.எல்.ஏ-க்கள் சுயமாக ராஜினாமா செய்வதால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவுகளை, அந்த ராஜினாமா செய்த நபர்களிடமிருந்தே தேர்தல் செலவுப் பாதுகாப்புத் தொகையாக வசூலிக்க வேண்டும்.
    கட்சி தாவி ராஜினாமா செய்த இந்த ஆறு பேரும், ஐந்து ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது.
    இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என தீர்ப்பளித்தது.
    அதே சமயம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதும் வெவ்வேறு நடவடிக்கைகள் என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ராஜினாமா செய்துவிட்டதால், ஏற்கனவே நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் முடிவுக்கு வந்துவிடாது எனக் கூறி, இரு மாதங்களுக்குள் அம்மனுக்கள் மீது முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சுதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    அதில் கூறப்பட்டிருந்ததாவது:
    அப்போது மனுதாரர் தரப்பில் முன்வைத்த வாதம்:
    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். குறிப்பாக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி இழப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, எம்.எல்.ஏ.,க்கள் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 190(3)(பி)ஐ பயன்படுத்தி, திட்டமிட்டு பதவிகளை ராஜினாமா செய்தனர். பின், ஆளுங்கட்சியில் சேர்ந்து அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் சட்டப்பூர்வ வெற்றிடம் நிலவுகிறது.
    கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் மீது குதிரை பேரம் மற்றும் சட்டவிரோத துாண்டுதல்கள் தொடர்பாக ஏற்கனவே எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.
    இந்த ராஜினாமாக்களை தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமே பார்க்க முடியாது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    ஒருவர் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராவதோ அல்லது வேறு கட்சியில் இணைவதோ அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ராஜினாமா உரிமையின் மீது நீதித்துறை உத்தரவுகள் மூலம் கூடுதல் நிபந்தனைகளை சுமத்த முடியாது.
    அரசியலமைப்பு சார்ந்த ரிட் வழக்குகளுக்கும், குற்றவியல் புலனாய்வுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. எப்.ஐ.ஆர்., மீது முறையான விசாரணை நடைபெற வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும்.
    இவ்வாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

  • செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

    செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

    சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 14.76 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்பதால், தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3.645 டிஎம்சி-யில், தற்போது 1.488 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதலமைச்சருக்கு ஏரியை பற்றிய தகவல்களை அதிகாரிகள் விளக்கி கூறினர். ஏரியின் நீர்மட்டம் 14.76 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஏரியில் வெள்ளக் கண்காணிப்பு அமைப்பின் செயல்பாடு, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

  • திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது – என்ன காரணம்? பின்னணி

    திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது – என்ன காரணம்? பின்னணி

    தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து சென்றுள்ளனர்

    அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்வார்கள்.

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் ஏற்கனவே அரசக்குமார் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது?

    இந்த வழக்கில் பி.என்.எஸ் சட்டப் பிரிவு 316(5), 318(4) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக லைவ் லா செய்தி ( Live law ) குறிப்பிட்டுள்ளது.

    பின்னர், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 12 ஆகிய பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டன.

    அன்பில் மகேஸை வழக்கில் சேர்த்ததற்கான அடிப்படை மற்றும் விசாரணைக்குத் தேவையான முன்அனுமதி தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

    அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. வில்சன், செப்டம்பர் 18ஆம் தேதி காவல்துறை அழைப்பாணையை ஏற்று அன்பில் மகேஸ் விசாரணைக்கு ஆஜரானதாகத் தெரிவித்தார்.

    அப்போது சுமார் எட்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 240 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் வாதிடப்பட்டதாக லைவ் லா செய்தி தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் திருச்சியில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அன்பில் மகேஸ் தலைமறைவாக மாட்டார், சாட்சிகளைக் கலைக்க மாட்டார், தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக உள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.” என அந்த செய்தி தெரிவிக்கிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும், பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

    விசாரணையில் முறைகேட்டுத் தொகை ரூ.400 கோடி வரை இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி (இன்று) முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அன்பில் மகேஸ் தரப்பு கூறுவது என்ன?

    தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஸ் தரப்பு நீதிமன்றத்தில் மறுத்துள்ளது.

    அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி, அவர் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதற்கான ஆவணங்களோ, முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ இல்லை என்று தெரிவித்துள்ளதால லைவ் லா செய்தி தெரிவித்துள்ளது.

    சிலர் அவரது பெயரைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரைக் குற்றம்சாட்ட முடியாது என்பதும் அவரது தரப்பு வாதமாக முன் வைத்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் இந்தப் புகார் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக” லைவ் லா செய்து குறிப்பிட்டுள்ளது.

    வழக்கின் பின்னணி

    தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

    இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அரசகுமார், பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

    நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியிருந்தனர்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்த தகவலின்படி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    அன்பில் மகேஸின் பெயர் எப்படி வந்தது?

    அரசகுமார் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசாரின் கூற்றுப்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அத்துடன், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பேசிய அவர், “மடியில் கனம் இல்லை” என்று கூறியதுடன், இந்தச் சோதனையால் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

  • குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய  ‘தாய்மாமன்’ எங்கே: கனிமொழி கேள்வி

    குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய ‘தாய்மாமன்’ எங்கே: கனிமொழி கேள்வி

    ‘‘குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமனை காணவில்லை,” என முதல்வர் விஜயை, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
    சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
    த.வெ.க., ஆட்சிக்கு வந்த, கடந்த ஐந்து மாதங்களில், தமிழக சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
    சென்னை எண்ணுார் தாழங்குப்பத்தில், இரண்டரை வயது குழந்தை, த.வெ.க., நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை நடந்துள்ளது. அக்குழந்தைக்கு இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அந்த அளவுக்கு, குழந்தை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், த.வெ.க., நிர்வாகி குற்றவாளியாக இருப்பதால், அவரை காப்பாற்றுவதிலேயே, அரசு முனைப்புடன் உள்ளது.
    செஞ்சியில், 15 நாட்களுக்கு முன் காணாமல் போன குழந்தையை, இன்று வரை, இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராணிப்பேட்டையில், ஒரு வயது குழந்தை காணாமல் போய், இதுவரை அக்குழந்தைக்கு என்ன ஆனது என்பது, யாருக்குமே தெரியாத சூழல் உள்ளது.
    துாத்துக்குடியில் ஒரே குடும்பத்தில், பெண் கொலை செய்யப்பட்டு, குழந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நாடா அல்லது காடா என, கேட்கும் சூழ்நிலை, உருவாகி இருக்கிறது.
    ‘தாய்மாமன் சீர்’ என, ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால், தாய்மாமனையே காணவில்லை. குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே சென்றார்; துாங்குகிறாரா; காணாமல் போய் விட்டாரா?
    ஆட்சியில் இருப்போர், மனசாட்சி இருந்தால், மக்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும்.
    இவ்வாறு கனிமொழி கூறினார்.

  • அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற முன் ஜாமீனை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஐந்தாவது முறையாக இன்று காலை  கையெழுத்திட்டார். இவ்வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் உடன் கைதான அதிமுக சேர்ந்த நிர்வாகிகள் சென்னையை சேர்ந்த இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும், திருச்சியில் தங்கியிருந்து இரண்டு வாரங்கள் திங்கள், புதன், வெள்ளி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்தது அடுத்து இன்று இவர்கள் இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தது, தமிழகத்தில் திமுக  அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் . தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை, ஆனால்  தேவையற்ற பல திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களுக்கு சொன்னதை நிறைவேற்றுங்கள்.

    இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பொருத்த வரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவில்லை. டி.ஆர்.பாலு கூறுகிறார் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று, கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார். கட்சி ரீதியாக ஜிஎஸ்டிக்குள்  கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது என குற்றம்சாட்டினார். கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள் என்றார். மேலும்  ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு, ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது. இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் கொடுத்து விசாரணை செய்வார்கள். இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை. திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களை விட்டால் அந்தமானுக்கு தள்ளி பேட்டி எடுக்க சொல்வார்கள் என தெரிவித்தார்.

    மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, ஏற்கனவே கட்சி எடுத்த ஒரே முடிவு தான். நேற்று, இன்று, நாளை கட்சி எடுத்த முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என பதிலளித்தார். முன்னதாக ஜெயக்குமார் கையெழுத்திட கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குள் வந்தபோது அவருடன் வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வாயிலில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

     

  • “பள்ளிகளில் சாதிய பாகுபாட்டைத் தடுக்க வேண்டும்”.. உதயநிதி வலியுறுத்தல்

    “பள்ளிகளில் சாதிய பாகுபாட்டைத் தடுக்க வேண்டும்”.. உதயநிதி வலியுறுத்தல்

    கோவையில் பள்ளியில் நிலவிய சாதிய பாகுபாட்டால் 15 வயது ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளார். உணவுப் பழக்கம் தொடர்பான கேள்வியில் மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய மாணவர் சாதிய வன்கொடுமையை எதிர்கொண்டதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.