சங்க காலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கோவளம் உப்பளங்கள், 2500 ஆண்டுகால தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டவை. அந்த உப்பளப் பகுதி தமிழர்களின் வரலாற்றோடும் கடல்சார் பொருளாதாரத்தின் முக்கிய தூணாகவும் விளங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் நோக்கில், உப்பளங்களை அழித்து அரசு அமைக்க இருக்கும் நீர்த் தேக்கத் தொட்டியால், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதி முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
‘செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட கோவளம் உப்பளப் பகுதியில் ரூ.342.60 கோடி மதிப்பில் ‘மாமல்லன்’ புதிய குடிநீர் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கடந்த ஆண்டு தி.மு.க., அரசு அறிவித்தது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் அடிக்கலும் நாட்டினார். முன்பு இதை எதிர்த்திருந்த த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு 15% நிறைவடைந்திருந்த மாமல்லன் திட்டப் பணிகளைத் தற்காலிகமாகக் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்தி வைத்தது. ‘இந்தத் திட்டத்தைக் கைவிடுவது தமிழகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும்’ என, வழக்கமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதனால், திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை என்றும், குழுவின் ஆய்வறிக்கைக்குப் பின்னரே அடுத்த கட்டப் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் நீர்வளத்துறை தெளிவுபடுத்தியது. இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அளவீட்டு உயர்வுகளின் காரணமாக, திட்ட மதிப்பீட்டில் மாற்றங்களும் கூடுதல் செலவினங்களும் கணக்கிடப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் வெளியானது.
இதனால், மீண்டும் இந்தத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் நிலவுகிறது. இதனால், இந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக் கோரி, 24 சுற்றுச்சூழல் அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கூறி கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தைச் சூழல் அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?
திட்டப் பின்னணியும் அரசு நடவடிக்கைகளும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர், மானமதி, சிறுதாவூர், காளவாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரி நீர், உப்பளம் மற்றும் அரசுக்குச் சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கோக்கிலமேடு முகத்துவாரங்களின் வழியாகக் கடலில் கலக்கிறது.
இதனால், கோவளம் உபவடிநிலப் பகுதியில் புதிய குடிநீர் நீர்த்தேக்கம் உருவாக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கம் சென்னை வடிநிலப்பகுதியில் நன்னீரைச் சேமிக்க உதவுகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலைப் பரவலாக்கவும் முடியும் என, தமிழ்நாடு அரசு நம்புகிறது.

இதற்காக இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளுக்கு இடைப்பட்ட உப்பளப் பகுதி உள்ளிட்ட 5,161 ஏக்கர் அரசு நிலங்கள் ஒதுக்கப்பட்டு, நீர்வளத்துறைக்கு நிலம் மாற்றும் அரசாணையும் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (SEAC) சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகள் பெறப்பட்டு, 34 கி.மீ.க்கு மண் கரை அமைப்பது மற்றும் பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புப் போன்ற பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
சூழலியல் அமைப்புகளின் முக்கியக் கோரிக்கைகள்
‘மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக நீர்வளத் துறை (WRD) அதிகாரி இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதால், அக்குழுவை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர்.

மேலும், இத்திட்டம் குறித்து வெளிப்படையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வை மேற்கொள்ள, சுயாதீன நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் பல்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இறுதியாக, திட்டத்தின் சுற்றுச்சூழல், நீரியல் மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்டப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அந்த அமைப்புகள் கடுமையாக வலியுறுத்தியுள்ளன.
சூழலியல் பாதிப்புகள் என்ன?
‘மாமல்லன் திட்டம் இயற்கையான நீரோட்டத்தை மாற்றியமைப்பதால், அப்பகுதியில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்’ என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, சோழிங்கநல்லூர், நாவலூர், சிறுதாவூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

உப்பளப் பகுதிகளும் அலையாத்திக் காடுகளும் இயற்கையான மணல் திட்டுக்களும் சுனாமி போன்ற பேரிடர்களின் போது கடல்நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. ஊர்ப் பகுதிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்து தற்காப்பு அரணாகவும் செயல்பட்டன.
இந்தப் பகுதியில் உள்ள இயற்றை அரண்களை அழித்து சதுப்பு நிலங்களை நீர்த்தேக்கமாக மாற்றினால், சிறிய கடல் சீற்றமும் அங்குள்ள கிராமங்களை நீரில் மூழ்கடிக்கும் நிலை ஏற்படலாம் என, மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோவளம் – நெம்மேலி உப்பளப் பகுதி மற்றும் ஈரநிலங்கள் அழிவதால், அங்கு வாழும் பறவையினங்கள் மற்றும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. குறிப்பாக, மத்திய ஆசிய பறவைப் பறப்புப் பாதையில் (Central Asian Flyway) வரும் ஆயிரக்கணக்கான வலசைப் பறவைகளின் வருகை இதனால் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
தவிர, கடலோரப் பகுதி மற்றும் உப்பளங்களை நம்பி வாழும் மீனவர்களின் மீன்பிடித் தொழிலையும், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இத்திட்டம் அழித்துவிடும்.

அதுமட்டுமின்றி இயற்கையான உப்பளங்கள் நன்னீர் நீர்த்தேக்கமாக மாற்றப்படுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீர் உவர்நீராக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் மற்றும் கடல் சீற்றங்களின் போது பாதுகாப்புச் சுவர்கள் இல்லாவிட்டால் கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, பெரிய நெம்மேலி பகுதி மக்கள் உப்பளப் பகுதிகளைப் பிரதானமாக நம்பியுள்ளவர்கள். இந்தத் திட்டத்தால் இறால் மீன்பிடித் தொழில் மற்றும் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
ஆகவே, இத்திட்டம் சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யவதாகக் கூறி முன்னெடுக்கப்பட்டாலும், இது நீண்டகால அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வாதிடுகின்றன.
ஆக, சூழல் அமைப்புகள், மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று ஆளும் அரசு மாமல்லன் திட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமா?

