‘‘குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமனை காணவில்லை,” என முதல்வர் விஜயை, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
த.வெ.க., ஆட்சிக்கு வந்த, கடந்த ஐந்து மாதங்களில், தமிழக சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
சென்னை எண்ணுார் தாழங்குப்பத்தில், இரண்டரை வயது குழந்தை, த.வெ.க., நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை நடந்துள்ளது. அக்குழந்தைக்கு இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அந்த அளவுக்கு, குழந்தை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், த.வெ.க., நிர்வாகி குற்றவாளியாக இருப்பதால், அவரை காப்பாற்றுவதிலேயே, அரசு முனைப்புடன் உள்ளது.
செஞ்சியில், 15 நாட்களுக்கு முன் காணாமல் போன குழந்தையை, இன்று வரை, இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராணிப்பேட்டையில், ஒரு வயது குழந்தை காணாமல் போய், இதுவரை அக்குழந்தைக்கு என்ன ஆனது என்பது, யாருக்குமே தெரியாத சூழல் உள்ளது.
துாத்துக்குடியில் ஒரே குடும்பத்தில், பெண் கொலை செய்யப்பட்டு, குழந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நாடா அல்லது காடா என, கேட்கும் சூழ்நிலை, உருவாகி இருக்கிறது.
‘தாய்மாமன் சீர்’ என, ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால், தாய்மாமனையே காணவில்லை. குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே சென்றார்; துாங்குகிறாரா; காணாமல் போய் விட்டாரா?
ஆட்சியில் இருப்போர், மனசாட்சி இருந்தால், மக்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
Tag: tamilnadu
-

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய ‘தாய்மாமன்’ எங்கே: கனிமொழி கேள்வி