Tag: tvk

  • த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழகத்தில் ஆளும் த.வெ.க., கட்சியில் இணைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை, மதராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை மே 25ல் ராஜினாமா செய்தனர்.
    இவர்களை தொடர்ந்து அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த ஜூன் 16 மற்றும் 29ல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
    சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க., கொறடா உத்தரவை மீறி, ஆறு பேரும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்தனர்.
    இதன் காரணமாக ஆறு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த நிலையில், த.வெ.க., கட்சியில் இணைந்தனர்.
    இதில், மரகதம் குமாரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் கடந்த அக்., 6ல் நடந்த இடைத்தேர்தலில் அதே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளனர்.
    முன்னதாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் சுதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    அதில், ‘எம்.எல்.ஏ-க்கள் சுயமாக ராஜினாமா செய்வதால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவுகளை, அந்த ராஜினாமா செய்த நபர்களிடமிருந்தே தேர்தல் செலவுப் பாதுகாப்புத் தொகையாக வசூலிக்க வேண்டும்.
    கட்சி தாவி ராஜினாமா செய்த இந்த ஆறு பேரும், ஐந்து ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது.
    இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என தீர்ப்பளித்தது.
    அதே சமயம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதும் வெவ்வேறு நடவடிக்கைகள் என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ராஜினாமா செய்துவிட்டதால், ஏற்கனவே நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் முடிவுக்கு வந்துவிடாது எனக் கூறி, இரு மாதங்களுக்குள் அம்மனுக்கள் மீது முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சுதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    அதில் கூறப்பட்டிருந்ததாவது:
    அப்போது மனுதாரர் தரப்பில் முன்வைத்த வாதம்:
    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். குறிப்பாக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி இழப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, எம்.எல்.ஏ.,க்கள் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 190(3)(பி)ஐ பயன்படுத்தி, திட்டமிட்டு பதவிகளை ராஜினாமா செய்தனர். பின், ஆளுங்கட்சியில் சேர்ந்து அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் சட்டப்பூர்வ வெற்றிடம் நிலவுகிறது.
    கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் மீது குதிரை பேரம் மற்றும் சட்டவிரோத துாண்டுதல்கள் தொடர்பாக ஏற்கனவே எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.
    இந்த ராஜினாமாக்களை தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமே பார்க்க முடியாது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    ஒருவர் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராவதோ அல்லது வேறு கட்சியில் இணைவதோ அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ராஜினாமா உரிமையின் மீது நீதித்துறை உத்தரவுகள் மூலம் கூடுதல் நிபந்தனைகளை சுமத்த முடியாது.
    அரசியலமைப்பு சார்ந்த ரிட் வழக்குகளுக்கும், குற்றவியல் புலனாய்வுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. எப்.ஐ.ஆர்., மீது முறையான விசாரணை நடைபெற வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும்.
    இவ்வாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

  • செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

    செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

    சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 14.76 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்பதால், தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3.645 டிஎம்சி-யில், தற்போது 1.488 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதலமைச்சருக்கு ஏரியை பற்றிய தகவல்களை அதிகாரிகள் விளக்கி கூறினர். ஏரியின் நீர்மட்டம் 14.76 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஏரியில் வெள்ளக் கண்காணிப்பு அமைப்பின் செயல்பாடு, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.