“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

Written by

in

ஈரானுடன் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கன்சாஸ் நகரின் கே.சி.எம்.ஓ வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: “ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது கைப்பற்றவோ முடியாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் அமெரிக்காவுக்கு தேவை. ஈரானிடம் அணுஆயுதம் இல்லாத நிலை உறுதி செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது அமெரிக்கா புதிய ராணுவத் தாக்குதல்களை நடத்தாது என ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார். எனினும், தேர்தல் முடிந்த உடனேயே ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்த மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், கத்தார் பிரதமரின் மூத்த ஆலோசகர் தலைமையிலான தூதுக்குழு வெள்ளிக்கிழமை டெஹ்ரான் சென்றடைந்தது. அவர்கள் ஈரான் உயர் அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்; அப்போதுதான் முறையான அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமேனி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *