Category: தமிழகம்

  • தீபாவளி பட்டாசு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் – அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ குழு தயார்

    தீபாவளி பட்டாசு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் – அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ குழு தயார்

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 படுக்கையுடன் 24 மணி நேரமும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளதாக குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுத்துறை தலைவர் சங்கரபாரதி தெரிவித்துள்ளார்.

    தீவாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடித்து ஏதேனும் தீக்காயம் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே நிச்சயம் பட்டாசு இருக்கும். அந்நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

    இது போன்ற கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து, பட்டாசு வெடித்து ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில், சென்னையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    24 மணி நேரமும் மருத்துவக் குழு

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 படுக்கையுடன் 24 மணி நேரமும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளதாக குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுத்துறை தலைவர் சங்கரபாரதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “விபத்துகளை தவிர்க்க குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கையாள வேண்டும். 24 மணி நேரமும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீக்காய விபத்துகளில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காயங்களின் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    Special wards to treat burns

    தீபாவளி பட்டாசு வெடிப்பு – கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? (ETV Bharat Tamil Nadu)

    தீக்காயத்தை உடனடியாக நீரில் கழுவ வேண்டும்

    சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காய உயர் சிகிச்சைப் பிரிவில் 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீக்காய விபத்து சிகிச்சை பிரிவின் இணை பேராசிரியர் தேன்மாெழி கூறும் போது, ”கடந்தாண்டு தீபாவளியின் போது 67 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்தாண்டு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வார்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பிளாஸ்டிக் சர்ஜரியுடன் சிறப்பாக சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

    தீக்காயம் ஏற்பட்டால் குழாய் நீரில் காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். காயத்தின் மீது மஞ்சள், கரி, மாவு போன்ற எந்தப்பொருளையும் போடக் கூடாது. காயத்தை கழுவி விட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

     

  • பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

    பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

    கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும், பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அந்தப் புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இதை தங்களது அரசியல் அருவெறுப்புக்கு பயன்படுத்தப் பார்க்கிறது தவெக.

    எதற்கெடுத்தாலும் திமுகவைக் குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட தவெக அரசைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திமுக மீது புழுதி வாரி இறைப்பதற்கென்றே செயல்படும் அக்கட்சியின் ‘வெர்ச்சுவல் அப்யூஸர்ஸ்’ கூட்டமும், வழக்கம்போல் பழியைத் தூக்கி திமுக மீது போட்டுவிடலாம் என்று செயல்பட்டனர்.

    இதில் அதிர்ச்சியான ஆச்சர்யம் என்ன என்றால், இதுவரை சட்டம் – ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினைக்கும் வாய்த்திறக்காத முதல்வரும் அதிசயமாய் அறிக்கை வெளியிட்டுள்ளார், மக்களைத் திசைத் திருப்ப இது பயன்படும் என்ற நப்பாசையால்!

    முதல்வர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நொடிப்பொழுதில் அரசின் அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ள விஜய், பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங்கியது தொடர்பான சர்ச்சை வெளியானதும், அது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை அவர் பொறுப்புடன் செய்ததாகத் தெரியவில்லை.

    நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என ‘வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை’யை முதலில் உருவாக்கியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை  மறைத்துவிட்டு தவெகவினர் பரப்புவது அவதூறு மட்டுமே.

    கோவையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்தில் தரமான நூல்கள் இடபெற வேண்டும் என மதிப்புமிக்க எழுத்தாளர்களையும், கல்வியாளர்களையும் உள்ளடக்கிய நூல் பரிந்துரைக் குழுவினை கடந்த திமுக ஆட்சியில் அமைத்தோம். புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனே, அந்த நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான்.

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நூலகங்களை உருவாக்கி, இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட நூலகங்களை அமைத்த திமுகவின் திட்டங்களில் இதற்குமுன் இப்படிப்பட்ட குறைகள் ஏதாவது எழுந்துள்ளனவா?

    ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் திட்டங்களைச் சிதைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தவெக ஆட்சியில் இத்தகைய செய்தி வந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளர்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

    எனவே, வழக்கம் போல் திமுக, திமுக என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்பதே திமுகவின் நிலைப்பாடு” என்று அவர் கூறியுள்ளார்.

    பெருமாள் முருகன் குற்றச்சாட்டு என்ன?

    எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற பிரம்மாண்ட நூலகத்துக்காக வாங்கப்பட்ட புத்தகங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஓர் எழுத்தாளராக நான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் நூல்களை பார்த்தாலே கட்டாயம் ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவரும்.

    தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்கள் உள்ள நிலையில், குறிப்பாக ஒரு பதிப்பகத்தின் 2,000 புத்தகங்கள் நூலக அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் அதிக விலை கொண்டவையாக உள்ளன. தமிழ்ச் சூழலில் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.150 விலை நிர்ணயிப்பார்கள். மிகவும் பிரபலமான எழுத்தாளரின் புத்தகமாக இருந்தால் ரூ.200 விலை நிர்ணயிப்பார்கள். ஆனால், இங்கு வழக்கமான விலையைவிட 5 மடங்கு அதிகமாக நிர்ணயித்துள்ளனர். ரூ.300 மதிப்புள்ள புத்தகத்துக்கு ரூ.1,500 விலை வைத்துள்ளனர். பெரும்பாலான புத்தகங்களின் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக உள்ளது.

    ஒரே பதிப்பகத்திலிருந்து சுமார் 2,000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை தரமானதாக இல்லை. அந்தப் புத்தகங்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களாகத் தெரிகின்றன. அவற்றை மோசடி புத்தகங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. அவற்றில் உள்ள தகவல்களும், தமிழ் மொழிநடையும் இயல்பாக இல்லை. அந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் இதுவரை வேறு எந்த நூல்களையும் எழுதியதாகத் தெரியவில்லை.

    இதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், பல புத்தகக் கட்டுகள் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளன. அவற்றையும் பிரித்துப் பார்த்தால், கோடி ரூபாய்க்கும்மேல் ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவரும். இந்தக் கொள்முதலில் தொடர்புடையவர்கள், புத்தகங்களை விநியோகம் செய்தவர்கள், கொள்முதல் ஆணை வழங்கியவர்கள், சம்பந்தப்பட்ட பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோரைக் கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

  • “பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்

    “பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்

    பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

    முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓத நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சர்ச்சை உருவானது. தி.க. தலைவர் கி.வீரமணியும் இதுகுறித்து விமர்சித்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேத்தியின் திருமணம் குறித்து சில விளக்கங்களை திமுக தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தலைவர் கருணாநிதியின் அடியொற்றி, நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டுவரும் எனது திருமணம், கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அதைப்போலவே, நான் முன்னின்று நடத்திய என் மகன் திருமணமும் கருணாநிதி தலைமையில்தான் நடைபெற்றது என்பதை நாடே அறியும்.

    அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், வைதீக முறைப்படியே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது.

    எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இந்த வைதீக முறை திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

     

     

  • திண்டுக்கலில் பிரபல தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

    திண்டுக்கலில் பிரபல தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

    திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி உட்பட 3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர், 69 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    அதேபோல, விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய கே.எம்.சரயு, பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தப் பொறுப்பில் இருந்த கே.பி.கார்த்திகேயன், மத்திய அரசுப் பணிக்கு சென்றதைத் தொடர்ந்து அங்கு சரயு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகிய பதவிகள், சமூக நலத் துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை பாஸ்கர பாண்டியன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    மாவட்ட வருவாய் அதிகாரிகள் நிலையில் உள்ள ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளர் எம்.அமிர்தலிங்கம், விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், கிருஷ்ணகிரி உதவி நிலவரித் திட்ட அதிகாரியாக இருந்த வி.ரவி, நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

    வருவாய்த் துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, வருவாய் கோட்டாட்சியர்களாக நாமக்கல் – ச.பிரபாகரன், கிருஷ்ணகிரி – கு.பூமா, திருப்பத்தூர் – இரா.குணசேகரன், ராமநாதபுரம் – எஸ்.ஜெயசித்ரகலா, மன்னார்குடி – சு.தனலட்சுமி, தாம்பரம் – எஸ்.ரேணுகா, கூடலூர் – ஏ.வி.கல்பனா, மதுரை – மா.வேலாயுதம், கோவை தெற்கு – டி.பாலமுருகன், மயிலாடுதுறை – கா.அமுதா, சென்னை மத்தி – ர.கிருபா உஷா, கடலூர் – ப.லாவண்யா உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகள், மாவட்டங்களில் 69 துணை ஆட்சியர் நிலையில் உள்ள வருவாய் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

     

     

  • ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

    ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

    ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீ்ஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஸை ஆஜர்படுத்தினர்.

    அப்போது, அன்பில் மகேஸின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘போலீஸார் உங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்களா?’’ என்று அன்பில் மகேஸைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அன்பில் மகேஸ், ‘போலீஸார் துன்புறுத்தவில்லை.

    முறையான உணவு வழங்கப்பட்டது’ என்று தெரிவி்த்தார். பின்னர் அன்பில் மகேஸை நாளை (நவ.6) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸார் மீண்டும் அவரை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

    அப்போது நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்த திமுகவினர் மத்தியில் அன்பில் மகேஸிடம் நலம் விசாரித்த திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், அன்பில் மகேஸைப் பார்த்து கண் கலங்கி, ‘தீபாவளி நேரத்தில் இப்படியா? ’ என்றார்.

    அதற்கு அன்பில் மகேஸ், ‘எதையும் சந்திப்போம் அக்கா.. நீங்க கலங்காதீங்க… பார்த்து பத்திரமா ஊருக்குப் போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஆறுதல் கூறும்போது அவரும் கண் கலங்கினார்.

    இதற்கிடையே, அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை இதே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • “குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

    “குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

    “டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56% சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.

    பல ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.

    தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தேர்வுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எனத் தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த காலங்களில், அமைச்சர்கள் வரையில் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கியதான குற்றச்சாட்டுக்களே இதற்கு நேரடி சாட்சி.

    இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நனவாக்க வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது மிகவும் கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வு முறையின் மீதும், அரசுப் பணி நியமனத்தின் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள, உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்துவதுமே, தமிழக இளைஞர்களுக்கு, மீண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்

  • காலை 6 மணி காட்சிக்கு அனுமதி; ரசிகர்கள் கொண்டாட்டம்

    காலை 6 மணி காட்சிக்கு அனுமதி; ரசிகர்கள் கொண்டாட்டம்

    தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கு முன் அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்றும் 6 மணிக் காட்சி வரையறுக்கப்பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டு துணிவு – வாரிசு ஆகிய பட வெளியீட்டின் போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அந்த ரசிகர் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லாரி மேல் ஏறி நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கீழே விழுந்து தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    ADVERTISMENT

    பின்பு தவெக ஆட்சி அமைந்தவுடன் தினசரி வழக்கமாக வழங்கும் 4 காட்சிகளை விட கூடுதலாக 1 காட்சி என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்தது. இதன்படி காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி அடுத்த நாள் நள்ளிரவு 2 மணி வரை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இது படம் வெளியாகும் முதல் நாளிலிருந்து 7 நாட்களுக்கு, உள்ளூர் பண்டிகை நாட்களுக்கு, பொதுவிடுமுறை நாட்களுக்கு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையிட அனுமதியளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் காலை 6 மணி முதல் காட்சி தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறைய்னர் சங்கங்கள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர். அதனை முதல்வரிடம் பேசிவிட்டு பரிசீலினை பண்ணுவதாக உறுதியளித்திருந்தார். இந்த சூழலில் காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அவர்கள் வெளியிடப்பட்ட உத்தரவில், “முதலமைச்சர் விஜய் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள்(ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!

    காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!

    மேகதாது அணை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, இக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கச் செய்து, காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குப் புதிய தலைமைப் பொறியாளரை நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர்ச் சிக்கல் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசின் உரிமைகளை நீதிமன்றங்களிலும் ஆணையங்களிலும் நிலைநிறுத்தி வரும் ‘காவிரி மற்றும் பன்மாநில நதிகள் தொழில்நுட்பப் பிரிவை’ (Cauvery and Interstate Rivers Technical Cell – CIRTC) வலுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இப்பிரிவில் காலியாக உள்ள தலைமைப் பொறியாளர் பதவியை நிரப்ப நீர்வளத்துறை எடுத்த முயற்சிக்கு நிதித்துறை ஒப்புதல் தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வரலாறும் தற்போதைய நிலையும்!

    காவிரி மற்றும் பிற பன்மாநில நதிநீர் பிரச்சினைகளில் தமிழ்நாடு சார்பில் சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வாதங்களை முன்வைப்பதற்காக, 1990ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசால் காவிரி மற்றும் பன்மாநில நதிகள் பிரிவு உருவாக்கப்பட்டது.

    சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 33 பணியாளர்களுடனும், புதுடெல்லியில் 5 பணியாளர்களுடனும் இயங்கி வரும் இப்பிரிவு, இதுவரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற 30க்கும் மேற்பட்ட நதிநீர் வழக்குகளுக்குத் தேவையான உத்திகளையும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கி, தமிழக அரசுக்கு முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் நீர்வளத்துறையில் தலைமைப் பொறியாளர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுப்பிரமணியன், செல்வராஜ், இளங்கோவன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் இப்பிரிவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமைப் பொறியாளர் பொறுப்புகளை வகித்தனர்.

    இக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் சுப்பிரமணியனுக்கு 84 வயது கடந்துவிட்டது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி போன்ற தொலைவிடக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்க முடியாமல் ஆன்லைன் வழியிலேயே பங்கேற்று வருகிறார். அவருடன் பணியாற்றிய பிற ஓய்வுபெற்ற பொறியாளர்களும் உடல்நலக் குறைவால் பணியில் இருந்து விலகிவிட்டனர்.

    சிக்கலும் விவசாயிகள் எதிர்பார்ப்பும்!

    தற்போது கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலம் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீரைக் காப்பதிலும், மேகதாது வழக்கை வலுவாக எதிர்கொள்வதிலும் இத்தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகிறது.

    84 வயதாகும் சுப்பிரமணியனுக்குப் பின் இக்குழுவைக் கையாள அனுபவமிக்க தலைமைப் பொறியாளர்கள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதை உணர்ந்த நீர்வளத்துறை, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டு காலியாக உள்ள தலைமைப் பொறியாளர், துணைத் தலைவர் பணியிடத்தில், தற்போது பணியில் இருக்கும் (In-service) தலைமைப் பொறியாளர் ஒருவரை நியமிக்கத் தீர்மானித்தது.

    இதற்காகக் கடந்த மார்ச் 2026ல் அனுப்பப்பட்ட கோப்பு, நிதித்துறை இணைச் செயலாளர் அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் நிலுவையில் உள்ளது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கவில்லை. நிதித்துறை இணைசெயலர் அலுவலகத்தில் ஐந்து மாதங்களாக அந்த பரிந்துரை கோப்பு கிடப்பில் உள்ளது.

    தொடர்கிறதா நிதித்துறையின் ஆதிக்கம்!

    தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மற்ற அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிதித்துறை, த.வெ.க. ஆட்சியிலும் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துத் தொடர்கிறது. இதனால், கடந்த ஆட்சியில் நடந்தது போலவே, மற்ற துறைகளின் மக்கள் நலப் பணிகள் தொய்வடையச் செய்யும். இது, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள த.வெ.க. அரசிற்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே ஒரு அரசின் ஆகப் பெரிய வெற்றியல்ல. அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் அதிகாரப் போட்டியைக் கண்டறிந்து களைந்து, மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதே அரசின் வெற்றியாக இருக்கும். வெற்றிக் கழகம் நிதித்துறையில் நிலவும் அதிகாரப் போட்டிகளை ஒடுக்கி, வெற்றி பெறுமா என்று நீர்வளத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் எடுக்கவுள்ள முடிவில் தான் தெரிய வரும்.

  • சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

    சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

    தென்னிந்தியாவின் முன்னணி பொருளாதார மற்றும் தொழில்துறை மையமாகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்து வந்த தமிழ்நாடு, அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக சந்ததித்து வரும் சவால்களும் மந்தநிலையும் சாமானிய பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும், தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைப் பொருளாதாரக் போட்டிக் களத்தில் பின்தள்ளியிருப்பதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியின் முதன்மை மையமாக அறியப்படும் தமிழ்நாடு, சமீபகாலமாகச் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்கனவே பேச்சுவார்த்தையில் இருந்த திட்டங்களை இறுதி செய்வதிலும் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. தென்கொரியாவின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய உதிரிபாகங்களை வழங்கி வரும் வாஷின், செஇயான் மற்றும் இவாமெட் ஆகிய மூன்று முக்கிய கொரிய உற்பத்தி நிறுவனங்கள், தமிழகத்திற்குப் பதிலாக ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சுமார் 1,614 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

    இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது தொழில் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து ஆரம்பத்தில் தமிழக அரசுடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தபோதிலும், த.வெ.க. அரசின் பின்தொடர்தல் இன்மையாலும், தெளிவற்ற கொள்கைகளாலும் அந்த முதலீடுகள் கைநழுவிப்போய் ஆந்திராவின் வசமாகியுள்ளன. இதன் காரணமாக ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் மட்டும் சுமார் 1,418 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், தமிழக இளைஞர்கள் பெறவிருந்த மிகப்பெரிய வேலைவாய்ப்புச் சந்தையை மாநில அரசு இழந்துள்ளதாகத் தொழில் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    ஆந்திரப் பிரதேச அரசு கொரிய முதலீட்டாளர்களைக் கவரும் பொருட்டுச் செயல்படுத்திய விரைவான அனுமதி முறைகளும், உயர் மட்ட உத்திகளுமே இந்த முதலீட்டு மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ஆந்திர அரசின் தொழில் துறை அமைச்சகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஆகியவை நேரடியாகச் தென் கொரியாவின் சியோல் நகருக்குத் தூதுக்குழுவை அனுப்பி, ஹூண்டாய் மற்றும் கியா விநியோகச் சங்கிலி நிறுவனங்களுடன் நேரடி வட்டமேசை மாநாடுகளை நடத்தின. அந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகச் சில மாதங்களுக்குள்ளேயே திட்டங்களுக்கான ஒப்புதல்களையும், தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடுகளையும் ஆந்திர அரசு உறுதி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக மாற்றியது. ஆனால், அதே நிறுவனங்கள் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஏற்கனவே தங்களது கிளைகளைக் கொண்டு இயங்கி வந்தபோதிலும், தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்காகத் தமிழக அரசை அணுகியபோது விரைவான முடிவுகளோ அல்லது ஊக்கச்சலுகைகளோ வழங்கப்படவில்லை.

    தமிழக அரசு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக விளம்பரப்படுத்தினாலும், களத்தில் அத்தகைய ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதில் நிலவும் தேக்கநிலை முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்தத் தயக்கத்தை உருவாக்கியுள்ளது. நிதி மேலாண்மை மற்றும் வரி வருவாய் ஈட்டல் களத்திலும் தமிழகத்தின் செயல்திறன் அண்மைக்காலமாகப் பெரும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஜி.எஸ்.டி. வசூல் நிலவரங்களின்படி, நாட்டின் பெரும்பாலான பெரிய மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து பொருளாதார மீட்சியை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் கடுமையான வருவாய் சரிவைச் சந்தித்து வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் நேரடி உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி முறையே மைனஸ் 1 சதவீதம் மற்றும் மைனஸ் 5 சதவீதம் என்ற அளவில் படுமோசமான எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் பெயரளவிற்கு 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே தமிழகத்தால் எட்ட முடிந்தது.

     

    இதே காலகட்டத்தில், அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் 24 சதவீத வளர்ச்சியையும், கர்நாடகா 18 சதவீத வளர்ச்சியையும், கேரளா 23 சதவீத வளர்ச்சியையும், தெலங்கானா 14 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்து சிறப்பான நிதி ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளன.

    மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 22.9 சதவீதமாக உயர்ந்துள்ள சூழலில், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு இந்த தேசிய சராசரியைக் காட்டிலும் வெகுவாகப் பின்தங்கியிருப்பது மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் நிலவும் கடுமையான கோளாறுகளைக் காட்டுகிறது. மாநிலத்தில் வணிக நடவடிக்கைகள் சுணங்கிப் போயிருப்பதும், நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவில் குறைந்துவிட்டதும், வர்த்தகத் துறையில் நிலவும் கட்டுப்பாடற்ற வரி ஏய்ப்பு மற்றும் அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்குமே இந்த வருவாய் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு நிதிகள் சரியான முறையில் பொருளாதாரச் சுழற்சிக்கு வராமல் முடங்கிப்போனதற்குத் த.வெ.க. அரசின் தொலைநோக்கற்ற நிதித் திட்டமிடலே சான்றாகப் பார்க்கப்படுகிறது.

    உற்பத்தி மற்றும் தொழில்துறை முதலீடுகள் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்வது என்பது வெறும் காகித அளவிலான இழப்பு மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சந்தையிலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

     

    பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளை மாற்றும்போது, அவற்றைச் சார்ந்து இயங்கும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் உதிரிபாகத் தயாரிப்புப் பட்டறைகளும், விநியோகச் சங்கிலி நிறுவனங்களும் தங்களது வணிக ஆர்டர்களை இழந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய தொழில்துறை மண்டலங்களில் இயங்கி வரும் சிறு தொழில் முனைவோர்கள், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு காரணமாகத் தங்களது உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளைத் தக்கவைக்கவும், அவற்றின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கவும் தவறும் ஒரு அரசு, புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதாகக் கூறுவது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே எஞ்சி நிற்கும்.

    கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் த.வெ.க. அரசின் வாக்குறுதிகளுக்கும் கள நிலவரத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுவதாக சமூக செயல்பாட்டாளர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்தும் கிடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை நிலவுவதும், நவீன மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பின்றி முடங்கிக் கிடப்பதும் சாமானிய ஏழை எளிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

     

    அரசு தனது நிதியாதாரங்களை நீண்டகால மூலதனச் செலவினங்களுக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செலவிடாமல், குறுகிய காலக் கவர்ச்சித் திட்டங்களுக்கும் விளம்பரப் பிரசாரங்களுக்கும் மட்டுமே வாரி வழங்குவது மாநிலத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    இன்னொரு புறம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து வருகிறது. காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவிட்டதாகவும், குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறைக்கு உரிய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் நில ஆக்கிரமிப்புச் சம்பவங்கள், சிறை கைதிகள் தப்பித்தல் அதிகரித்து வருவதை ஒடுக்க அரசு நிர்வாகம் திணறி வருகிறது.

     

    சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறும் ஒரு மாநிலத்தில் எந்தவொரு பன்னாட்டு முதலீட்டாளரும் நீண்டகால அடிப்படையில் தொழில் தொடங்க முன்வர மாட்டார்கள் என்ற அடிப்படைப் பொருளாதார விதியைத் தவெக அரசு மறந்ததன் விளைவையே தற்போதைய தொழிற்துறை பின்னடைவுகள் வெளிப்படுத்துகின்றன.

    அமைச்சர்களின் துறைசார் அனுபவமின்மையும், தலைமைச் செயலகத்தில் கோப்புகள் மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் தாமதமும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடக்கிப் போட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் தொடர்ச்சியான இடமாற்றங்களும், கொள்கை முடிவுகளில் நிலவும் தெளிவின்மையும் மாநிலத்தின் நிர்வாக வேகத்தைக் குறைத்துள்ளன. பிம்ப அரசியலையும் ஊடக மேலாண்மையையும் மட்டுமே நம்பி ஆட்சியை நடத்த முயலும் த.வெ.க. அரசு, களத்தில் எழும் பொருளாதார சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளைக் காணத் தவறிவிட்டது.

    எனவே, தமிழ்நாடு தனது பாரம்பரியமான பொருளாதார மேன்மையையும் தொழில் தலைமைத்துவத்தையும் மீட்டெடுக்க வேண்டுமானால், த.வெ.க. அரசு உடனடியாகத் தனது விளம்பர உத்திகளைக் கைவிட்டு, களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியது அவசியமாகும். வெளிப்படையான தொழில் கொள்கை, விரைவான ஒற்றைச் சாளர அனுமதி முறை, சிறு தொழில்களுக்கான வரி மற்றும் மின்கட்டணச் சலுகைகள், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே அண்டை மாநிலங்களின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள முடியும்.

     

    இளைஞர்களின் எதிர்காலத்தையும் மாநிலத்தின் நிதி ஸ்திரத்தன்மையையும் பலிகொடுத்து நிகழ்த்தப்படும் இந்த ஆட்சியைத் திருத்திக்கொள்ளத் தவறினால், தமிழ்நாடு தென்னிந்தியாவின் பொருளாதார வரைபடத்தில் தனது முதன்மை இடத்தை நிரந்தரமாக இழக்கும் அபாயம் உருவாகும்.