சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

தென்னிந்தியாவின் முன்னணி பொருளாதார மற்றும் தொழில்துறை மையமாகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்து வந்த தமிழ்நாடு, அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக சந்ததித்து வரும் சவால்களும் மந்தநிலையும் சாமானிய பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும், தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைப் பொருளாதாரக் போட்டிக் களத்தில் பின்தள்ளியிருப்பதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியின் முதன்மை மையமாக அறியப்படும் தமிழ்நாடு, சமீபகாலமாகச் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்கனவே பேச்சுவார்த்தையில் இருந்த திட்டங்களை இறுதி செய்வதிலும் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. தென்கொரியாவின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய உதிரிபாகங்களை வழங்கி வரும் வாஷின், செஇயான் மற்றும் இவாமெட் ஆகிய மூன்று முக்கிய கொரிய உற்பத்தி நிறுவனங்கள், தமிழகத்திற்குப் பதிலாக ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சுமார் 1,614 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது தொழில் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து ஆரம்பத்தில் தமிழக அரசுடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தபோதிலும், த.வெ.க. அரசின் பின்தொடர்தல் இன்மையாலும், தெளிவற்ற கொள்கைகளாலும் அந்த முதலீடுகள் கைநழுவிப்போய் ஆந்திராவின் வசமாகியுள்ளன. இதன் காரணமாக ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் மட்டும் சுமார் 1,418 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், தமிழக இளைஞர்கள் பெறவிருந்த மிகப்பெரிய வேலைவாய்ப்புச் சந்தையை மாநில அரசு இழந்துள்ளதாகத் தொழில் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆந்திரப் பிரதேச அரசு கொரிய முதலீட்டாளர்களைக் கவரும் பொருட்டுச் செயல்படுத்திய விரைவான அனுமதி முறைகளும், உயர் மட்ட உத்திகளுமே இந்த முதலீட்டு மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ஆந்திர அரசின் தொழில் துறை அமைச்சகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஆகியவை நேரடியாகச் தென் கொரியாவின் சியோல் நகருக்குத் தூதுக்குழுவை அனுப்பி, ஹூண்டாய் மற்றும் கியா விநியோகச் சங்கிலி நிறுவனங்களுடன் நேரடி வட்டமேசை மாநாடுகளை நடத்தின. அந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகச் சில மாதங்களுக்குள்ளேயே திட்டங்களுக்கான ஒப்புதல்களையும், தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடுகளையும் ஆந்திர அரசு உறுதி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக மாற்றியது. ஆனால், அதே நிறுவனங்கள் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஏற்கனவே தங்களது கிளைகளைக் கொண்டு இயங்கி வந்தபோதிலும், தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்காகத் தமிழக அரசை அணுகியபோது விரைவான முடிவுகளோ அல்லது ஊக்கச்சலுகைகளோ வழங்கப்படவில்லை.

தமிழக அரசு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக விளம்பரப்படுத்தினாலும், களத்தில் அத்தகைய ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதில் நிலவும் தேக்கநிலை முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்தத் தயக்கத்தை உருவாக்கியுள்ளது. நிதி மேலாண்மை மற்றும் வரி வருவாய் ஈட்டல் களத்திலும் தமிழகத்தின் செயல்திறன் அண்மைக்காலமாகப் பெரும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஜி.எஸ்.டி. வசூல் நிலவரங்களின்படி, நாட்டின் பெரும்பாலான பெரிய மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து பொருளாதார மீட்சியை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் கடுமையான வருவாய் சரிவைச் சந்தித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் நேரடி உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி முறையே மைனஸ் 1 சதவீதம் மற்றும் மைனஸ் 5 சதவீதம் என்ற அளவில் படுமோசமான எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் பெயரளவிற்கு 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே தமிழகத்தால் எட்ட முடிந்தது.

 

இதே காலகட்டத்தில், அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் 24 சதவீத வளர்ச்சியையும், கர்நாடகா 18 சதவீத வளர்ச்சியையும், கேரளா 23 சதவீத வளர்ச்சியையும், தெலங்கானா 14 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்து சிறப்பான நிதி ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளன.

மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 22.9 சதவீதமாக உயர்ந்துள்ள சூழலில், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு இந்த தேசிய சராசரியைக் காட்டிலும் வெகுவாகப் பின்தங்கியிருப்பது மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் நிலவும் கடுமையான கோளாறுகளைக் காட்டுகிறது. மாநிலத்தில் வணிக நடவடிக்கைகள் சுணங்கிப் போயிருப்பதும், நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவில் குறைந்துவிட்டதும், வர்த்தகத் துறையில் நிலவும் கட்டுப்பாடற்ற வரி ஏய்ப்பு மற்றும் அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்குமே இந்த வருவாய் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு நிதிகள் சரியான முறையில் பொருளாதாரச் சுழற்சிக்கு வராமல் முடங்கிப்போனதற்குத் த.வெ.க. அரசின் தொலைநோக்கற்ற நிதித் திட்டமிடலே சான்றாகப் பார்க்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் தொழில்துறை முதலீடுகள் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்வது என்பது வெறும் காகித அளவிலான இழப்பு மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சந்தையிலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

 

பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளை மாற்றும்போது, அவற்றைச் சார்ந்து இயங்கும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் உதிரிபாகத் தயாரிப்புப் பட்டறைகளும், விநியோகச் சங்கிலி நிறுவனங்களும் தங்களது வணிக ஆர்டர்களை இழந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய தொழில்துறை மண்டலங்களில் இயங்கி வரும் சிறு தொழில் முனைவோர்கள், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு காரணமாகத் தங்களது உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளைத் தக்கவைக்கவும், அவற்றின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கவும் தவறும் ஒரு அரசு, புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதாகக் கூறுவது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே எஞ்சி நிற்கும்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் த.வெ.க. அரசின் வாக்குறுதிகளுக்கும் கள நிலவரத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுவதாக சமூக செயல்பாட்டாளர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்தும் கிடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை நிலவுவதும், நவீன மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பின்றி முடங்கிக் கிடப்பதும் சாமானிய ஏழை எளிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

 

அரசு தனது நிதியாதாரங்களை நீண்டகால மூலதனச் செலவினங்களுக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செலவிடாமல், குறுகிய காலக் கவர்ச்சித் திட்டங்களுக்கும் விளம்பரப் பிரசாரங்களுக்கும் மட்டுமே வாரி வழங்குவது மாநிலத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இன்னொரு புறம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து வருகிறது. காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவிட்டதாகவும், குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறைக்கு உரிய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் நில ஆக்கிரமிப்புச் சம்பவங்கள், சிறை கைதிகள் தப்பித்தல் அதிகரித்து வருவதை ஒடுக்க அரசு நிர்வாகம் திணறி வருகிறது.

 

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறும் ஒரு மாநிலத்தில் எந்தவொரு பன்னாட்டு முதலீட்டாளரும் நீண்டகால அடிப்படையில் தொழில் தொடங்க முன்வர மாட்டார்கள் என்ற அடிப்படைப் பொருளாதார விதியைத் தவெக அரசு மறந்ததன் விளைவையே தற்போதைய தொழிற்துறை பின்னடைவுகள் வெளிப்படுத்துகின்றன.

அமைச்சர்களின் துறைசார் அனுபவமின்மையும், தலைமைச் செயலகத்தில் கோப்புகள் மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் தாமதமும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடக்கிப் போட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் தொடர்ச்சியான இடமாற்றங்களும், கொள்கை முடிவுகளில் நிலவும் தெளிவின்மையும் மாநிலத்தின் நிர்வாக வேகத்தைக் குறைத்துள்ளன. பிம்ப அரசியலையும் ஊடக மேலாண்மையையும் மட்டுமே நம்பி ஆட்சியை நடத்த முயலும் த.வெ.க. அரசு, களத்தில் எழும் பொருளாதார சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளைக் காணத் தவறிவிட்டது.

எனவே, தமிழ்நாடு தனது பாரம்பரியமான பொருளாதார மேன்மையையும் தொழில் தலைமைத்துவத்தையும் மீட்டெடுக்க வேண்டுமானால், த.வெ.க. அரசு உடனடியாகத் தனது விளம்பர உத்திகளைக் கைவிட்டு, களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியது அவசியமாகும். வெளிப்படையான தொழில் கொள்கை, விரைவான ஒற்றைச் சாளர அனுமதி முறை, சிறு தொழில்களுக்கான வரி மற்றும் மின்கட்டணச் சலுகைகள், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே அண்டை மாநிலங்களின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள முடியும்.

 

இளைஞர்களின் எதிர்காலத்தையும் மாநிலத்தின் நிதி ஸ்திரத்தன்மையையும் பலிகொடுத்து நிகழ்த்தப்படும் இந்த ஆட்சியைத் திருத்திக்கொள்ளத் தவறினால், தமிழ்நாடு தென்னிந்தியாவின் பொருளாதார வரைபடத்தில் தனது முதன்மை இடத்தை நிரந்தரமாக இழக்கும் அபாயம் உருவாகும்.

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *