Category: முக்கிய செய்திகள்

  • இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

    இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

    இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இனி எந்த வயதை சேர்ந்தவர்களும் வயது வரம்பின்றி சட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும், 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

    விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

    இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

    விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தார். விராலிமலை தொகுதியை உள்​ளடக்கி மேற்கு மாவட்​டச் செய​லா​ளராக உள்​ளார்.

    வழக்​க​மாக தேர்​தலை ஒட்டி வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது தொகுதி மக்​களுக்கு பொங்​கல் பானை உள்​ளிட்ட பரிசுப் பொருட்​களை விஜயபாஸ்​கர் விநியோகிப்​பார். ஆனால், முதன்​முறை​யாக தனக்கு வாக்​களித்​தவர்​களுக்கு நன்றி தெரி​விக்​கும் வித​மாக, எம்​எல்ஏ பத​வியை ராஜினாமா செய்த பிறகு கடந்த ஜூன் மாதத்​தில் எவர்​சில்​வர் பாத்திரம், குலோப் ஜாமூன் டின், நன்றி கடிதம், எழுதுபொருட்​கள் ஆகியவை அவரது படத்​துடன் கூடிய பையில் வைத்து தொகுதி முழு​வதும் விநியோகிக்​கப்​பட்​டன.

    இந்​நிலை​யில், விராலிமலை உள்​ளிட்ட 5 தொகுதி​களில் விரைவில் இடைத்​தேர்​தல் அறி​விக்​கப்​பட உள்ள நிலை​யில், விஜயபாஸ்​கர் சார்​பில் எவர்​சில்​வர் பாத்திரம், குலோப் ஜாமூன் டின், தவெக சின்​னமான விசில் ஆகிய​வற்றை விஜயபாஸ்​கர் படத்​துடன் கூடிய துணிப் பையில் வைத்​துத் தொகுதி முழு​வதும் அவரது ஆதர​வாளர்​கள் வீடுதோறும் விநியோகித்து வரு​கின்​றனர்.

    இது​குறித்து விஜயபாஸ்​கர் ஆதர​வாளர்​கள் கூறும்​போது, “இடைத்​தேர்​தலில் தவெக-வில் இருந்து விஜயபாஸ்கரே போட்​டி​யிடுவார். அதற்​காக தொகுதி முழு​வதும் தீவிர​மாக விளம்​பரம் செய்து வரு​கிறோம். மேலும், வாக்​காளர்​களின் கவனத்தை ஈர்ப்​ப​தற்​காகப் பரிசுப் பொருட்​கள் விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்றன” என்​றனர்.

    திமுக குற்​றச்​சாட்டு: சென்னை அண்ணா அறிவாலயத்​தில் செய்​தி​யாளர்​களிடம் திமுக முன்​னாள் அமைச்​சர் ரகுபதி கூறிய​தாவது: விராலிமலை தொகுதிக்கு தேர்​தல் தேதி அறி​விக்​க​வில்லை. வேட்​பாளர் அறி​விக்​க​வில்லை. ஆனால், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் அனைத்து குடும்ப அட்​டைதா​ரர்​களுக்​கும் எவர்​சில்​வர் பெரிய பாத்​திரம், அதற்​குள் ஸ்​வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் ஆகிய​வற்றை வைத்து வீட்​டுக்கு வீடு கொடுத்​துள்​ளார். ஒரு வீட்​டுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்​புள்ள பொருட்​களை முதல் கட்​ட​மாக விநியோகிக்​கத் தொடங்கி இருக்​கிறார்.

    இது​தான் தூய்​மையான ஆட்சி. ஓட்​டுக்கு எது​வுமே கொடுக்க மாட்​டோம் என்​றார்​கள். ஆனால், விஜயபாஸ்​கர் 90 ஆயிரம் குடும்ப அட்​டைதா​ரர்​களுக்​கும் வீடு தவறாமல் பொருட்​களை கொடுத்​துக் கொண்​டிருக்​கிறார். அது​த​விர மற்​றவர்​களுக்கு எல்​லாம் ரொக்​க​மாக பணம் கொடுக்​கிறார். தேர்​தல் எப்​போது வருமோ தெரிய​வில்லை. இப்​பவே பட்​டுவாடா ஆரம்​பிச்​சிட்​டாங்​கன்னா எத்​தனை கோடியை அங்கே கொட்​டப் போகிறார்​கள் என்​பதை பார்க்க வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​தார்.

  • ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி உட்பட 3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர், 69 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    அதேபோல, விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய கே.எம்.சரயு, பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தப் பொறுப்பில் இருந்த கே.பி.கார்த்திகேயன், மத்திய அரசுப் பணிக்கு சென்றதைத் தொடர்ந்து அங்கு சரயு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகிய பதவிகள், சமூக நலத் துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை பாஸ்கர பாண்டியன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    மாவட்ட வருவாய் அதிகாரிகள் நிலையில் உள்ள ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளர் எம்.அமிர்தலிங்கம், விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், கிருஷ்ணகிரி உதவி நிலவரித் திட்ட அதிகாரியாக இருந்த வி.ரவி, நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

    வருவாய்த் துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, வருவாய் கோட்டாட்சியர்களாக நாமக்கல் – ச.பிரபாகரன், கிருஷ்ணகிரி – கு.பூமா, திருப்பத்தூர் – இரா.குணசேகரன், ராமநாதபுரம் – எஸ்.ஜெயசித்ரகலா, மன்னார்குடி – சு.தனலட்சுமி, தாம்பரம் – எஸ்.ரேணுகா, கூடலூர் – ஏ.வி.கல்பனா, மதுரை – மா.வேலாயுதம், கோவை தெற்கு – டி.பாலமுருகன், மயிலாடுதுறை – கா.அமுதா, சென்னை மத்தி – ர.கிருபா உஷா, கடலூர் – ப.லாவண்யா உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகள், மாவட்டங்களில் 69 துணை ஆட்சியர் நிலையில் உள்ள வருவாய் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

     

     

  • ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

    ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

    ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீ்ஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஸை ஆஜர்படுத்தினர்.

    அப்போது, அன்பில் மகேஸின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘போலீஸார் உங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்களா?’’ என்று அன்பில் மகேஸைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அன்பில் மகேஸ், ‘போலீஸார் துன்புறுத்தவில்லை.

    முறையான உணவு வழங்கப்பட்டது’ என்று தெரிவி்த்தார். பின்னர் அன்பில் மகேஸை நாளை (நவ.6) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸார் மீண்டும் அவரை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

    அப்போது நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்த திமுகவினர் மத்தியில் அன்பில் மகேஸிடம் நலம் விசாரித்த திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், அன்பில் மகேஸைப் பார்த்து கண் கலங்கி, ‘தீபாவளி நேரத்தில் இப்படியா? ’ என்றார்.

    அதற்கு அன்பில் மகேஸ், ‘எதையும் சந்திப்போம் அக்கா.. நீங்க கலங்காதீங்க… பார்த்து பத்திரமா ஊருக்குப் போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஆறுதல் கூறும்போது அவரும் கண் கலங்கினார்.

    இதற்கிடையே, அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை இதே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா

    நேர்மையின் பாதை இதழ் வெளியீட்டு விழா

    சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேர்மையின் பாதை புலனாய்வு இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    *நேர்மையின் பாதை ஆசிரியர் C.சந்தோஷ்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்

    முதல் பிரதியை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் அவர்கள் வெளியிட அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தலைவர் அ.வேல்முருகன் பெற்றுக் கொண்டார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அரசு டீவி மற்றும் வெளிச்சம் பத்திரிகை ஆசிரியர் C.பெஞ்சமின் முன்னாள் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் S.சந்தன்பாபு, ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் விஎம்தமிழன் வடிவேல், மகளிர் உரிமைக் கழக தலைவர் Bகல்பனா, தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் GGசிவா, இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன்,
    தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் க.குமார் , சமத்துவநீதி ஆசிரியர் கருணாகரன்
    என பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள்,சங்க தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    *நேர்மையின் பாதை உதவி ஆசிரியர் S.ஷீஜா அனைவரையும் வரவேற்றார்

    அ.சரவணன் ஆசிரியர் மண்ணின் குரல், V.பாலமுருகன் ஆசிரியர் அரசு மலர், ஆ.ராஜேஷ் ஆசிரியர் தின முகம் எக்ஸ்பிரஸ் நியூஸ், திருமதி. கிருஷ்ணவேணி ஆசிரியர் நீதியின் தீர்ப்பு, N.மூர்த்தி ஆசிரியர் சுதேசி சிந்தனை, S.கிரி குமார் ஆசிரியர் உதய நிலவு, பா.கோட்டீஸ்வரன் தலைமை நிருபர் உள்ளாட்சி டுடே, G.பாலாஜி ஆசிரியர் ரிப்போர்ட்டர் பிளாஷ், B.ரமேஷ் பாபு ஆசிரியர் எழுத்து தூது, தா.பேராண்மை பதிப்பாசிரியர் நீதிக்கான போர்க்குரல்,செந்தில் ஆசிரியர் தீரன் நியூஸ், S.M.புவனேஸ்வரன் ஆசிரியர் புவனம் நியூஸ், T.K.வேல்ராஜ்
    ஆசிரியர் Nationalism News, கணேஷ் குமார் ஆசிரியர் நீதி கதிர், S.ரங்கநாதன் ஆசிரியர் சிங்கார சென்னை, S.தனசேகரன் ஆசிரியர் செய்தி வாசல், M.வெங்கடாசலபதி ஆசிரியர் நடுநிலை அரசியல், E.K.வடிவேலன் ஆசிரியர் தொழிலாளர் ஊடகம், அ.பால்ராஜ் (எ) ஐஸ்வர்யன் பொறுப்பாசிரியர் சித்திரை பூக்கள், ஆ.வீ.கன்னையா ஆசிரியர் நம் மக்களின் சபதம், K.லிங்கேஸ்வரராஜா ஆசிரியர் பாரதி எக்ஸ்பிரஸ், தங்கதுரை ஆசிரியர் தேசிய ரிப்போர்டர், N.சரண்குமார் ஆசிரியர் ஜனநாயக தூண், Dr.S.ஜெயபாரதி தீன உரிமை மக்கள் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஜெயா டிவி நெறியாளர் பூர்ணிமா பாலசுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.

  • அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

    அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

    அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுப்ரமணி, “இன்று இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நமது அக்னி வீரர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். அனைத்து அக்னி வீரர்களும் இந்திய ராணுவத்தில் நிரந்தரமாகச் சேருவதற்கான வழிவகையை மத்திய அமைச்சரவை உருவாக்கி உள்ளது.

    அக்னிபாத் திட்டம் ஜூன் 14, 2022-ல் தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது, அக்னி வீரர்களின் செயல்பாடு தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்றும், இத்திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதல் தொகுதியைச் சேர்ந்த அக்னி வீரர்களின் நான்கு ஆண்டு பணிக்காலம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

    இந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்களின் பணித்திறன் குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதியின் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் வழக்கமான ராணுவ படைகளில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

    மீதமுள்ள 75 சதவீத அக்னி வீரர்கள் ஒழுக்கமான, ஊக்கமுள்ள இளைஞர்களாக மீண்டும் சமூகத்துக்கு திரும்புவார்கள் என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி, அந்த 75 சதவீத அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இந்த 2 ஆண்டு காலம் முடிந்த பிறகு, விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என தெரிவித்தார்.

    2022ல் அக்னி வீரர்கள் ஆயுதப்படைகளில் சேர்க்கப்பட்டபோது, அவர்களின் பணிக்காலம் குறைவாக இருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. பிஹாரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அக்னி வீரர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இத்திட்டத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

    சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

    உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தின் விவரம்: ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ‘உச்ச நீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது.’

    இந்தக் கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள வழக்காடிகள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காக புதுடெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது.

    தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், இக்கிளையை அமைப்பது, அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்ச நீதிமன்றக் கிளையின் தேவைகளை நிறைவு செய்யும்.

    சென்னை உயர் நீதிமன்றமானது 1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர்நீதிமன்றங்களில் ஒன்றானது என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவித் தரத்துக்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும்.

    07.08.2007 அன்று உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு இப்பொருண்மை குறித்த தனது முந்தைய தீர்மானங்களிலிருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை – பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர்.

    பல நாடுகளில் இல்லாத சிறப்பம்சமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதற்கான முதன்மைக் காரணமும் இதுவே. நாளடைவில், பிரிவு 32-ன் கீழான தீர்வானது, புவியியல் ரீதியாக இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு அருகில் வசிக்கக் கூடியவர்கள் மற்றும் வழக்குச் செலவுகளையும், பயணச் செலவுகளையும் பொருட்டாகக் கருதாதவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.

    இதனால், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையைப் பெறும் வாய்ப்பை புதுடெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது.

    உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை (சிவில்) எண்.36/2016 (வி.வசந்தகுமார் – எதிர் – எச்.சி.பாட்டியா மற்றும் சிலர்) வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 13.07.2016 அன்று பிறப்பித்த உத்தரவில், எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வை அமைப்பது என்பதும் ஒன்றாகும்.

    இவை குறித்து, ஓர் உறுதியான முடிவைப் பெறுவதற்காக அரசியலமைப்பு அமர்வு ஒன்று அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, இவ்வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, தென்னிந்திய மாநிலங்களில், சென்னையின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கை மற்றும் காரணங்களைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்ச நீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும். 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இவை தொடர்பாக அளித்த பரிந்துரைகள், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர மண்டலக் கிளைகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தும் சட்ட ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் இத்தகைய கிளைகளின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதியிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது’ என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

     

     

  • “இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

    “இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

    இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நேரடியாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இஸ்ரேலுக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

    மேலும், இந்த நிதி உதவி விவகாரம் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக ஜனநாயகக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    குறிப்பாக, மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத் போன்றவர்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் நிதி உதவியைக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதனால் குடியரசுக் கட்சியினர் வீண் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா ஆண்டிற்கு சுமார் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே நிதி உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    2026 அமெரிக்க இடைத்தேர்தலில் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!

    காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!

    மேகதாது அணை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, இக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கச் செய்து, காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குப் புதிய தலைமைப் பொறியாளரை நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர்ச் சிக்கல் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசின் உரிமைகளை நீதிமன்றங்களிலும் ஆணையங்களிலும் நிலைநிறுத்தி வரும் ‘காவிரி மற்றும் பன்மாநில நதிகள் தொழில்நுட்பப் பிரிவை’ (Cauvery and Interstate Rivers Technical Cell – CIRTC) வலுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இப்பிரிவில் காலியாக உள்ள தலைமைப் பொறியாளர் பதவியை நிரப்ப நீர்வளத்துறை எடுத்த முயற்சிக்கு நிதித்துறை ஒப்புதல் தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வரலாறும் தற்போதைய நிலையும்!

    காவிரி மற்றும் பிற பன்மாநில நதிநீர் பிரச்சினைகளில் தமிழ்நாடு சார்பில் சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வாதங்களை முன்வைப்பதற்காக, 1990ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசால் காவிரி மற்றும் பன்மாநில நதிகள் பிரிவு உருவாக்கப்பட்டது.

    சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 33 பணியாளர்களுடனும், புதுடெல்லியில் 5 பணியாளர்களுடனும் இயங்கி வரும் இப்பிரிவு, இதுவரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற 30க்கும் மேற்பட்ட நதிநீர் வழக்குகளுக்குத் தேவையான உத்திகளையும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கி, தமிழக அரசுக்கு முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் நீர்வளத்துறையில் தலைமைப் பொறியாளர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுப்பிரமணியன், செல்வராஜ், இளங்கோவன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் இப்பிரிவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமைப் பொறியாளர் பொறுப்புகளை வகித்தனர்.

    இக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் சுப்பிரமணியனுக்கு 84 வயது கடந்துவிட்டது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி போன்ற தொலைவிடக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்க முடியாமல் ஆன்லைன் வழியிலேயே பங்கேற்று வருகிறார். அவருடன் பணியாற்றிய பிற ஓய்வுபெற்ற பொறியாளர்களும் உடல்நலக் குறைவால் பணியில் இருந்து விலகிவிட்டனர்.

    சிக்கலும் விவசாயிகள் எதிர்பார்ப்பும்!

    தற்போது கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலம் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீரைக் காப்பதிலும், மேகதாது வழக்கை வலுவாக எதிர்கொள்வதிலும் இத்தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகிறது.

    84 வயதாகும் சுப்பிரமணியனுக்குப் பின் இக்குழுவைக் கையாள அனுபவமிக்க தலைமைப் பொறியாளர்கள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதை உணர்ந்த நீர்வளத்துறை, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டு காலியாக உள்ள தலைமைப் பொறியாளர், துணைத் தலைவர் பணியிடத்தில், தற்போது பணியில் இருக்கும் (In-service) தலைமைப் பொறியாளர் ஒருவரை நியமிக்கத் தீர்மானித்தது.

    இதற்காகக் கடந்த மார்ச் 2026ல் அனுப்பப்பட்ட கோப்பு, நிதித்துறை இணைச் செயலாளர் அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் நிலுவையில் உள்ளது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கவில்லை. நிதித்துறை இணைசெயலர் அலுவலகத்தில் ஐந்து மாதங்களாக அந்த பரிந்துரை கோப்பு கிடப்பில் உள்ளது.

    தொடர்கிறதா நிதித்துறையின் ஆதிக்கம்!

    தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மற்ற அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிதித்துறை, த.வெ.க. ஆட்சியிலும் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துத் தொடர்கிறது. இதனால், கடந்த ஆட்சியில் நடந்தது போலவே, மற்ற துறைகளின் மக்கள் நலப் பணிகள் தொய்வடையச் செய்யும். இது, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள த.வெ.க. அரசிற்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே ஒரு அரசின் ஆகப் பெரிய வெற்றியல்ல. அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் அதிகாரப் போட்டியைக் கண்டறிந்து களைந்து, மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதே அரசின் வெற்றியாக இருக்கும். வெற்றிக் கழகம் நிதித்துறையில் நிலவும் அதிகாரப் போட்டிகளை ஒடுக்கி, வெற்றி பெறுமா என்று நீர்வளத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் எடுக்கவுள்ள முடிவில் தான் தெரிய வரும்.

  • ‘மாமல்லனால்’ சூழலியல் பேரழிவு: தமிழர் வரலாற்றைப் புதைத்து கட்டப்படும் நீர்த் தேக்கம் எதற்கு?

    ‘மாமல்லனால்’ சூழலியல் பேரழிவு: தமிழர் வரலாற்றைப் புதைத்து கட்டப்படும் நீர்த் தேக்கம் எதற்கு?

    சங்க காலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கோவளம் உப்பளங்கள், 2500 ஆண்டுகால தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டவை. அந்த உப்பளப் பகுதி தமிழர்களின் வரலாற்றோடும் கடல்சார் பொருளாதாரத்தின் முக்கிய தூணாகவும் விளங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் நோக்கில், உப்பளங்களை அழித்து அரசு அமைக்க இருக்கும் நீர்த் தேக்கத் தொட்டியால், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதி முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ‘செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட கோவளம் உப்பளப் பகுதியில் ரூ.342.60 கோடி மதிப்பில் ‘மாமல்லன்’ புதிய குடிநீர் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கடந்த ஆண்டு தி.மு.க., அரசு அறிவித்தது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் அடிக்கலும் நாட்டினார். முன்பு இதை எதிர்த்திருந்த த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு 15% நிறைவடைந்திருந்த மாமல்லன் திட்டப் பணிகளைத் தற்காலிகமாகக் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்தி வைத்தது. ‘இந்தத் திட்டத்தைக் கைவிடுவது தமிழகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும்’ என, வழக்கமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

    இதனால், திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை என்றும், குழுவின் ஆய்வறிக்கைக்குப் பின்னரே அடுத்த கட்டப் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் நீர்வளத்துறை தெளிவுபடுத்தியது. இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அளவீட்டு உயர்வுகளின் காரணமாக, திட்ட மதிப்பீட்டில் மாற்றங்களும் கூடுதல் செலவினங்களும் கணக்கிடப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் வெளியானது.

    இதனால், மீண்டும் இந்தத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் நிலவுகிறது. இதனால், இந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக் கோரி, 24 சுற்றுச்சூழல் அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

    சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கூறி கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தைச் சூழல் அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

    திட்டப் பின்னணியும் அரசு நடவடிக்கைகளும்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர், மானமதி, சிறுதாவூர், காளவாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரி நீர், உப்பளம் மற்றும் அரசுக்குச் சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கோக்கிலமேடு முகத்துவாரங்களின் வழியாகக் கடலில் கலக்கிறது.

    இதனால், கோவளம் உபவடிநிலப் பகுதியில் புதிய குடிநீர் நீர்த்தேக்கம் உருவாக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கம் சென்னை வடிநிலப்பகுதியில் நன்னீரைச் சேமிக்க உதவுகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலைப் பரவலாக்கவும் முடியும் என, தமிழ்நாடு அரசு நம்புகிறது.

    இதற்காக இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளுக்கு இடைப்பட்ட உப்பளப் பகுதி உள்ளிட்ட 5,161 ஏக்கர் அரசு நிலங்கள் ஒதுக்கப்பட்டு, நீர்வளத்துறைக்கு நிலம் மாற்றும் அரசாணையும் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    மேலும், மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (SEAC) சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகள் பெறப்பட்டு, 34 கி.மீ.க்கு மண் கரை அமைப்பது மற்றும் பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புப் போன்ற பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

    சூழலியல் அமைப்புகளின் முக்கியக் கோரிக்கைகள்

    ‘மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக நீர்வளத் துறை (WRD) அதிகாரி இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதால், அக்குழுவை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர்.

    மேலும், இத்திட்டம் குறித்து வெளிப்படையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வை மேற்கொள்ள, சுயாதீன நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் பல்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

    இறுதியாக, திட்டத்தின் சுற்றுச்சூழல், நீரியல் மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்டப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அந்த அமைப்புகள் கடுமையாக வலியுறுத்தியுள்ளன.

    சூழலியல் பாதிப்புகள் என்ன?

    ‘மாமல்லன் திட்டம் இயற்கையான நீரோட்டத்தை மாற்றியமைப்பதால், அப்பகுதியில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்’ என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    குறிப்பாக, சோழிங்கநல்லூர், நாவலூர், சிறுதாவூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

    உப்பளப் பகுதிகளும் அலையாத்திக் காடுகளும் இயற்கையான மணல் திட்டுக்களும் சுனாமி போன்ற பேரிடர்களின் போது கடல்நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. ஊர்ப் பகுதிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்து தற்காப்பு அரணாகவும் செயல்பட்டன.

    இந்தப் பகுதியில் உள்ள இயற்றை அரண்களை அழித்து சதுப்பு நிலங்களை நீர்த்தேக்கமாக மாற்றினால், சிறிய கடல் சீற்றமும் அங்குள்ள கிராமங்களை நீரில் மூழ்கடிக்கும் நிலை ஏற்படலாம் என, மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    கோவளம் – நெம்மேலி உப்பளப் பகுதி மற்றும் ஈரநிலங்கள் அழிவதால், அங்கு வாழும் பறவையினங்கள் மற்றும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. குறிப்பாக, மத்திய ஆசிய பறவைப் பறப்புப் பாதையில் (Central Asian Flyway) வரும் ஆயிரக்கணக்கான வலசைப் பறவைகளின் வருகை இதனால் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

    தவிர, கடலோரப் பகுதி மற்றும் உப்பளங்களை நம்பி வாழும் மீனவர்களின் மீன்பிடித் தொழிலையும், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இத்திட்டம் அழித்துவிடும்.

    அதுமட்டுமின்றி இயற்கையான உப்பளங்கள் நன்னீர் நீர்த்தேக்கமாக மாற்றப்படுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீர் உவர்நீராக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் மற்றும் கடல் சீற்றங்களின் போது பாதுகாப்புச் சுவர்கள் இல்லாவிட்டால் கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுதவிர, பெரிய நெம்மேலி பகுதி மக்கள் உப்பளப் பகுதிகளைப் பிரதானமாக நம்பியுள்ளவர்கள். இந்தத் திட்டத்தால் இறால் மீன்பிடித் தொழில் மற்றும் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.

    ஆகவே, இத்திட்டம் சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யவதாகக் கூறி முன்னெடுக்கப்பட்டாலும், இது நீண்டகால அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வாதிடுகின்றன.

    ஆக, சூழல் அமைப்புகள், மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று ஆளும் அரசு மாமல்லன் திட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமா?