Category: முக்கிய செய்திகள்

  • எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு – டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

    எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு – டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

    TN Reduce Aviation Fuel VAT: விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை 16 சதவிகிதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் கட்டணம் குறைந்து சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    VAT வரியை குறைத்த தமிழ்நாடு அரசு:

    மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவாக, பட்டியலிடப்பட்ட விமான சேவைகளுக்கான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 29 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச மதிப்பு கூட்டு வரிகளில் ஒன்றை சென்னை பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை குறைத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவு, வரும் நவம்பர் 1ம் தேதியில் தொடங்கி 2027ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள மற்ற விமான நிலையங்களில், விமான எரிபொருளுக்கான மதிப்பு கூட்டு வரி 5 சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    விமான போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை:

    தமிழ்நாடு அரசின் அறிவிப்பானது விமான எரிபொருள் வரிவிதிப்பு அளவில் தமிழ்நாட்டை அதன் அண்டை மாநிலங்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. அதோடு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் நீண்டகாலக் கோரிக்கை ஓரளவு நிறைவேறியுள்ளது. விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவில் விமான எரிபொருள் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இதில் VAT ஒரு முக்கிய காரணியாக உள்ளது. விமான எரிபொருள் மீதான VAT விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் நீண்டகாலமாக மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன. தற்போது வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பயன்பெறும் வகையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டிலிருந்து விமான இணைப்புகளை மேம்படுத்தவும், புதிய விமானச் சேவைகளைச் சேர்க்கவும் வேண்டிய பொறுப்பு விமான நிறுவனங்கள் வசம் சென்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவும் டெல்லியும் விமான எரிபொருள் மீதான VAT விகிதத்தைக் குறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கூடுதல் விமான சேவைகள் கிடைக்குமா?

    எரிபொருள் மீதான அதிகப்படியான வரியால் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதோடு, அந்த கட்டணம் செலுத்தி மக்கள் ஆர்வம் காட்டாததால், பல விமான நிறுவனங்கள், சென்னையிலிருந்து தங்களது சேவைகளை கணிசமாக குறைத்துள்ளன. இந்நிலையில் வரி குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் விலை குறைவதோடு, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போதுமான இடவசதி இல்லாதது மற்றும் சுமாரான பராமரிப்பு ஆகியவற்றோடு, எரிபொருள் மீதான அதிகப்படியான மதிப்பு கூட்டு வரியும் சென்னை விமான நிலையத்தின் செயல்திறன் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இண்டிகோ நிறுவனம் பாராட்டு

    தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்றுள்ள இண்டிகோ நிறுவனம், “இத்தகைய முடிவுகளானது விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து, இந்தியாவில் மேலும் வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலமைப்பிற்கு பங்களிக்கின்றன” என குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தொழில்துறை வல்லுநர்களும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • கன்னியாகுமரியில் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாத் தலங்கள் மூடல்

    கன்னியாகுமரியில் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாத் தலங்கள் மூடல்

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (அக்.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை அனைத்து சுற்றுலாத் தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடல் மற்றும் நீர்நிலைகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு நீர்நிலைகளை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? – தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்

    செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? – தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்

    செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம்.

     

    செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த தமிழக அரசு, இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இதுவரையிலான நடவடிக்கைகள்

    அக்டோபர் 12 முதல் மாயம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஹேமலதா, அக்டோபர் 12 அதிகாலை முதல் மாயமாகியுள்ளார்.

    வீட்டில் கடைசியாக இருந்த சிறுமி

    அக்டோபர் 11 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, இரவு 11 மணியளவில் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 6 மணியளவில் அவர் மாயமானது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.

    தீவிர தேடுதல் பணி

    100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 11 நாட்களாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ட்ரோன்கள், வெப்பக் கண்காணிப்புக் கருவிகள், மோப்ப நாய்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தடயவியல் நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது. கிணறுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலும் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

    CB-CID விசாரணை தொடக்கம்

    தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கை மாற்றியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (CB-CID) விசாரணையைத் தொடங்கியது.

    திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் எனச் சந்தேகம்

    சிறுமி மாயமான சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஒரு கும்பல் சிறுமியைக் கடத்தி அருகிலுள்ள கிராமங்கள் வழியாகச் சென்றதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    CCTV மற்றும் செல்போன் பதிவுகள் ஆய்வு

    ஆலம்பூண்டி, திருவண்ணாமலை மற்றும் நடுப்பட்டு இடையிலான சாலைகளில் உள்ள CCTV கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அக்டோபர் 11 இரவு முதல் அக்டோபர் 12 அதிகாலை வரையிலான செல்போன் டவர் பதிவுகளும் பரிசோதிக்கப்பட்டன.

    சந்தேக நபர்கள் குறித்த விசாரணை

    உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களின் பின்னணியைப் போலீசார் ஆய்வு செய்தனர். குற்றப் பின்னணி உள்ளவர்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 600 செல்போன் அழைப்புப் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    குடும்பத்தினர் வேதனை

    சிறுமிக்கு என்ன நடந்தது, அவர் எப்படிக் காணாமல் போனார் என்பது தெரியவில்லை என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார். முதலில் வீட்டிலும் அருகிலுள்ள வயல்களிலும் கால்வாய்ப் பகுதியிலும் தேடிய குடும்பத்தினர் பின்னர் காவல்துறையை அணுகினர்.

    காவல்துறை உறுதி

    வழக்கின் ஆவணங்கள் CB-CID குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், விசாரணைக்குத் தேவையான கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    CB-CID விசாரணையை தொடங்கியுள்ளது

    இந்த வழக்கை அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்கும் வகையில் CB-CID தன்னுடையை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

  • அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    அதிமுகவில் சசிகலாவிற்கு எப்போதும் இடம் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற முன் ஜாமீனை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஐந்தாவது முறையாக இன்று காலை  கையெழுத்திட்டார். இவ்வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் உடன் கைதான அதிமுக சேர்ந்த நிர்வாகிகள் சென்னையை சேர்ந்த இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும், திருச்சியில் தங்கியிருந்து இரண்டு வாரங்கள் திங்கள், புதன், வெள்ளி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்தது அடுத்து இன்று இவர்கள் இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தது, தமிழகத்தில் திமுக  அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் . தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை, ஆனால்  தேவையற்ற பல திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களுக்கு சொன்னதை நிறைவேற்றுங்கள்.

    இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பொருத்த வரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவில்லை. டி.ஆர்.பாலு கூறுகிறார் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று, கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார். கட்சி ரீதியாக ஜிஎஸ்டிக்குள்  கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது என குற்றம்சாட்டினார். கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள் என்றார். மேலும்  ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு, ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது. இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் கொடுத்து விசாரணை செய்வார்கள். இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை. திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களை விட்டால் அந்தமானுக்கு தள்ளி பேட்டி எடுக்க சொல்வார்கள் என தெரிவித்தார்.

    மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, ஏற்கனவே கட்சி எடுத்த ஒரே முடிவு தான். நேற்று, இன்று, நாளை கட்சி எடுத்த முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என பதிலளித்தார். முன்னதாக ஜெயக்குமார் கையெழுத்திட கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குள் வந்தபோது அவருடன் வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வாயிலில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

     

  • ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி

    ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி

    ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் ஹேனி ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் F37/38 பிரிவில் 60.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 1,116 ரேசா புள்ளிகளைப் பெற்றார். ஈரான் வீரர் ஹார்மோஸ் வெள்ளிப் பதக்கமும், சீன வீரர் யூ செங்ஜி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-ஐக் கடந்தது

  • ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது திமுக: முதல்வர் விஜய் பேச்சு  மதுராந்தகம்

    ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது திமுக: முதல்வர் விஜய் பேச்சு மதுராந்தகம்

    “தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்” என ஜெம் வீரமணி விவகாரத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதுராந்தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, தொழுப்​பேடு பகு​தி​யில் நடக்கும் பிரச்​சா​ரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் விஜய், “ நான் இங்கு முதல்வராக வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டுக் கேட்டு உங்கள் வீட்டு பிள்ளையாக வந்துள்ளேன். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா? பிறகு ஏன் இந்த தீயசக்தி திமுக நம்மை பார்த்து தினம் தினம் ஆபாசமாக பேசுகிறது.

    நாட்டில் இப்போது ஒரே ஆபாசநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் வெற்றி பெற்றதற்கு மக்கள் தான் காரணம். அன்று ஜெயலலிதாவை ஸ்டாலின் அவதூறாக பேசினார். இப்போது அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அவ்வாறு பேசும் திமுகவுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவளிக்கிறது.

    ஜெயலலிதாவை அவமதித்த திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தபோதே அதிமுகவின் முகமூடி கிழிந்துவிட்டது. மதுராந்தகத்தில் என் தங்கைக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விசிலுக்கு வாக்களிப்பது என்பது பெண்களை அசிங்கமாக, ஆபாசமாக பேசுவோருக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ வாக்களித்தால் அது பெண்களை ஆபாசமாக பேசுவதை ஆதரிப்பதாக மாறிவிடும். நம் வீட்டு பெண்களை இவ்வாறு பேசுபவர்களை சும்மா விடக்கூடாது.

    108 இடங்களில் வென்ற நாம் ஆட்சியமைக்க கூடாது என திமுக, அதிமுகவும் ஒரு கூத்து நடத்தினார்கள். அதிமுக பாஜகவின் ஒரு பிரிவு, ஆனால் இப்போது அதிமுக திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. மக்கள் காசை கொள்ளை அடித்தவர்கள் ஆட்சிக்கு வரலாம், சாமானியர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள்.

    விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊழல் செய்யமுடியாது, கொள்ளை அடிக்க முடியாது என திமுகவும், அதிமுகவும் திட்டம் போட்டார்கள். இதனையே ஐயுஎம்எல் சட்டப்பேரவையில் சொன்னார்கள். எனவேதான் திமுக செய்த ஊழல்களை சட்டப்பேரவையில் சொன்னேன். சட்டப்பேரவையில் ஊழல் என சொல்லிவிட்டால், திமுகவினர் ஆதாரத்தை காட்டச் சொல்வார்கள். ஆதாரம் காட்டினால், அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பார்கள். நீதிமன்றத்தில் உள்ளதை பேசக்கூடாது என்பார்கள். நான் பேச்சை ஆரம்பிக்கும் போது கூட்டமாக சத்தம் போடுவார்கள். அவர்களின் நோக்கம் என்னை பேசவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது. அதனால் தான் நான் சத்தமாக பேச வேண்டியுள்ளது.

    ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம் என திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சொல்லிக்கொள்கிறேன். இதுவரை ஊழலே செய்ததில்லை என திமுகவால் சொல்ல முடியுமா? இனிமேல் ஊழலே செய்யமாட்டேன் என திமுகவால் சொல்ல முடியுமா? எப்படி பார்த்தாலும் இரண்டே பேருக்கும் இடையேதான் போட்டி. தீய சக்தி திமுகவுக்கும், தூயசக்தி தவெகவுக்கும் இடையேதான் போட்டி. எனது கேள்வி எப்போதும் ஸ்டாலினுக்குதான்.

    நான் ஒரு பாலத்தில் ஆய்வு செய்ய சென்றால், அது நாங்கள் கட்டியது என திமுக சொல்கிறது. அந்தப் பாலத்தை உங்கள் வீட்டில் காசில் கட்டினீர்களா ஸ்டாலின் சார்? உங்களிடம்தான் சொந்தமாக கார் கூட இல்லையே சார்? முதல்வர் என்பவர் மக்களின் வேலைக்காரன். முதல்வர் என்றால் மக்களின் முதலாளி கிடையாது. தமிழகத்துக்கு நீங்கள்தான் முதலாளி போல பேசுகிறீர்கள்.

    தவெக ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்க்க திமுக திட்டம் போடுகிறது. தவெக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. ஆட்சியமைக்கும் போது மக்களிடம் அவகாசம் கேட்டேன். இப்போது விஜய் அரசும் கடன் தான் வாங்குகிறது என்கிறார்கள். நான் மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன், கொள்ளையடிக்க அல்ல. ஆறு சிலிண்டர் தருவதாக சொன்னேன், இப்போது நிதிநிலையை கருத்தில் கொண்டு 3 சிலிண்டர் தந்துள்ளேன். இதனை விமர்சித்து வருகிறார்கள்.

    எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தீயசக்தி என சொன்ன திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க அதிமுக முயற்சி செய்ததால் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் மனவலி ஏற்பட்டது. இதனால்தான் மரகதம் குமரவேல் நம்மிடம் வந்து சேர்ந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல எனக்கும் திமுக தான் எதிரி.

    எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். இப்போது என்ன ஆச்சு, பாஜகவே மூச்சுவிட திணறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல. டெல்லியில் உள்ள திமுகவுக்கு பெயர் பாஜக, தமிழகத்தில் உள்ள பாஜகவுக்கு பெயர்தான் திமுக. எப்போது தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப வரும், எப்போது பாஜகவுடன் சேரலாம் என திமுக காத்துக்கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக வென்றுவிட்டால், ஜனவரி மாதத்தில் தவெக ஆட்சி கலையும் என திமுக பேசுகிறது. திமுக, பாஜக, அதிமுக எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    இந்த விஜய்யையும், விஜய் கூட உள்ள மக்களையும் தொடாதீர்கள். அப்புறம் ஏன் தொட்டோம் என காலத்துக்கும் புலம்புவீர்கள். நம் மீது எந்தக் குற்றச்சாட்டு வைக்க முடியவில்லை என்ற விரக்தியில், தமிழக பெண்களை அசிங்கமாக திமுக பேசுகிறது. இதனை ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கிறார்கள்.

    தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார். இந்த விவகாரத்தில் அதிமுகவும் வாயை திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டு?

    பெண்கள் பாதுகாப்புக்கே பிறந்தது போல பேசும் திமுக, அதிமுகவும், அந்த ஆளைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்தக் குற்றவாளியை உள்ளே தூக்கி வைத்துவிட்டோம். பச்சைப் பிள்ளைகளின் வலியை பேச முடியவில்லை என்றால் என்ன அரசியல் செய்கிறீர்கள். எனவே, இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்றார்.