எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு – டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

TN Reduce Aviation Fuel VAT: விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை 16 சதவிகிதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் கட்டணம் குறைந்து சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VAT வரியை குறைத்த தமிழ்நாடு அரசு:

மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவாக, பட்டியலிடப்பட்ட விமான சேவைகளுக்கான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 29 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச மதிப்பு கூட்டு வரிகளில் ஒன்றை சென்னை பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை குறைத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவு, வரும் நவம்பர் 1ம் தேதியில் தொடங்கி 2027ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள மற்ற விமான நிலையங்களில், விமான எரிபொருளுக்கான மதிப்பு கூட்டு வரி 5 சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை:

தமிழ்நாடு அரசின் அறிவிப்பானது விமான எரிபொருள் வரிவிதிப்பு அளவில் தமிழ்நாட்டை அதன் அண்டை மாநிலங்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. அதோடு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் நீண்டகாலக் கோரிக்கை ஓரளவு நிறைவேறியுள்ளது. விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவில் விமான எரிபொருள் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இதில் VAT ஒரு முக்கிய காரணியாக உள்ளது. விமான எரிபொருள் மீதான VAT விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் நீண்டகாலமாக மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன. தற்போது வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பயன்பெறும் வகையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டிலிருந்து விமான இணைப்புகளை மேம்படுத்தவும், புதிய விமானச் சேவைகளைச் சேர்க்கவும் வேண்டிய பொறுப்பு விமான நிறுவனங்கள் வசம் சென்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவும் டெல்லியும் விமான எரிபொருள் மீதான VAT விகிதத்தைக் குறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விமான சேவைகள் கிடைக்குமா?

எரிபொருள் மீதான அதிகப்படியான வரியால் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதோடு, அந்த கட்டணம் செலுத்தி மக்கள் ஆர்வம் காட்டாததால், பல விமான நிறுவனங்கள், சென்னையிலிருந்து தங்களது சேவைகளை கணிசமாக குறைத்துள்ளன. இந்நிலையில் வரி குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் விலை குறைவதோடு, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போதுமான இடவசதி இல்லாதது மற்றும் சுமாரான பராமரிப்பு ஆகியவற்றோடு, எரிபொருள் மீதான அதிகப்படியான மதிப்பு கூட்டு வரியும் சென்னை விமான நிலையத்தின் செயல்திறன் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ நிறுவனம் பாராட்டு

தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்றுள்ள இண்டிகோ நிறுவனம், “இத்தகைய முடிவுகளானது விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து, இந்தியாவில் மேலும் வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலமைப்பிற்கு பங்களிக்கின்றன” என குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தொழில்துறை வல்லுநர்களும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *