‘எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாடம் தேவையில்லை’ – சோனியா காந்தி ஆவேசம்

அரசியல் வெற்றிக்காக எங்களுக்கு ஆர்எஸ்எஸ் பாடம் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டிற்கு முன்னதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர், ‘கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் கட்டமைப்பு, ஜனநாயகம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் கடுமையாக சீரழிக்கப்பட்டுள்ளன’ என குற்றம்சாட்டினார்.

மேலும், ‘இந்த அரசு பதவியில் இருந்து விலகினாலும் கூட, சிதைக்கப்பட்ட நமது அரசு அமைப்புகளை மீண்டும் சீரமைப்பதற்கு நீண்ட காலமும், அரசியல் கட்சிகளின் கடுமையான உழைப்பும் தேவைப்படும்’ என்றும் அவர் எச்சரித்தார்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பாதிப்புகளை தற்போது உணர தொடங்கியுள்ளதால், மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியும் அமைதியின்மையும் நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி, ‘பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சமமான அரசியல் களம் வழங்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்’ என்று கூறினார்.

அரசு நிறுவனங்களின் மீதான முழுமையான பிடி, தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதிக்கம், ஊடகக் கட்டுப்பாடு, பண பலம் மற்றும் மதவெறி பிரச்சாரம் ஆகியவற்றின் மூலமே தற்போதைய ஆட்சி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

1975-1977 ஆண்டுகளில் அமலில் இருந்த நெருக்கடி நிலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘வன்முறை சம்பவங்கள், அரசு அலுவலகங்களுக்கு தீவைப்பு போன்ற அசாதாரண சூழலை கட்டுப்படுத்தவே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முயன்றார். அவரே பின்னர் 1977 மார்ச் மாதத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை அறிவித்து, நிகழ்ந்த தவறுகளுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி நெருக்கடி நிலை காலத்தை விட மிக மோசமாக உள்ளது’ என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் எழுச்சி குறித்து கேட்ட போது, ‘அவர் முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தியல் உலகத்தில் இருந்து வந்தவர் என்பது உண்மை தான்’ என்று சோனியா காந்தி கூறினார். இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்கள் தங்களது அசாத்திய உழைப்பால் உயர்ந்து சாதனை படைத்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், ‘அரசியலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து எந்தப் பாடமும் கற்கத் தேவையில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வழிகளில் பழிவாங்கல்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை காக்க தொடர்ந்து கிராமப்புறங்கள் வரை போராடி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக நடந்த தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்து மக்கள் உணர்ந்துள்ளதாகவும், ஒத்த கருத்துடைய பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து வருவதால், தங்களது அரசியல் எதிர்காலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் நாளுக்கு நாள் பிரகாசமாகி வருவதாகவும் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *