Category: முக்கிய செய்திகள்

  • 20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ரூ.1,500-ல் வருடாந்திர சிறப்பு பாஸ்: நவ.1 முதல் சுங்கக் கட்டண சலுகை அமல்

    20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ரூ.1,500-ல் வருடாந்திர சிறப்பு பாஸ்: நவ.1 முதல் சுங்கக் கட்டண சலுகை அமல்

    சுங்கச் சாவடியி​லிருந்து 20 கி.மீ. தொலை​வுக்​குள் வசிக்​கும் வாகன உரிமை​யாளர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.1,500 கட்டணத்​தில் சிறப்பு பாஸ் வழங்​கப்​படும் என மத்​திய அரசு அறிவித்​துள்​ளது.

    நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளுக்கு அரு​கில் வசிக்​கும் மக்​களுக்​காக, மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத்​துறை அமைச்​சகம் ஒரு புதிய சலுகையை அறி​வித்​துள்​ளது. இதன்​படி, சுங்​கச் சாவடியி​லிருந்து 20 கி.மீ. தொலை​வுக்​குள் வசிக்​கும் தகு​தி​யுள்ள தனி​யார் வாகன உரிமை​யாளர்​கள், ஆண்​டுக்கு ரூ.1,500 கட்​ட​ணத்​தில் சிறப்பு பாஸ் பெற்​றுக்​கொள்​ளலாம். இது தொடர்​பாக தேசிய நெடுஞ்​சாலைக் கட்டண விதி​களில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த புதிய விதி​கள் நவம்​பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    யார் தகு​தி​யானவர்​கள்?

    திருத்​தப்​பட்ட விதி​களின்​படி, செல்​லுபடி​யாகும் ‘பாஸ்​டேக்’ கணக்கு​களைக் கொண்ட, தகு​தி​யுள்ள வணி​கம் அல்​லாத வாகனங்​களுக்கு மட்​டுமே இந்த சிறப்பு பாஸ் வழங்​கப்​படும். வாகன உரிமை​யாளர்​கள் திருத்​தப்​பட்ட விதி​களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்​தனை​களை​ பூர்த்தி செய்ய வேண்​டும். இந்த சிறப்பு பாஸ், அது வழங்​கப்​பட்ட குறிப்​பிட்ட சுங்கச்சாவடிக்கு மட்​டுமே செல்​லுபடி​யாகும்.

    சுங்​கச்​சாவடி​யானது நகராட்சி அல்​லது உள்​ளூர் நகர எல்லைகளுக்​குள் அமைந்​துள்​ளதா அல்​லது வெளியே அமைந்துள்ளதா என்​ப​தைப் பொறுத்​து, அரசு 2 வரு​டாந்​திரக் கட்டணங்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. அதன்​படி, நகராட்சி அல்​லது உள்​ளூர் நகர எல்​லைகளுக்கு வெளியே அமைந்​துள்ள சுங்​கச்​சாவடிகளுக்கு அரு​கில் வசிக்​கும் வாகன உரிமையாளர்கள் ஆண்​டுக்கு ரூ.1,500 செலுத்த வேண்​டும். நகராட்சி அல்​லது உள்​ளூர் நகர எல்​லைக்​குள் அமைந்​துள்ள சுங்கச்​சாவடிகளுக்​கு, சிறப்பு பாஸ் கட்​ட​ணம் ரூ.3,000 ஆகும்.

    மூடிய பயனர் கட்டண வசூல் முறை​யின் கீழ் இயங்​கும் தேசிய நெடுஞ்​சாலைகள் அல்​லது விரைவுச்​சாலைகளில் இந்த வசதி கிடைக்​காது. மேலும், சேவைச் சாலை அல்​லது மாற்​றுச்​ ​சாலை பயன்​​பாட்​டுக்​கு கிடைக்​கும்​ இடங்​களில்​, ​வாகன உரிமையாளர்கள்​ இத்​திட்​டத்​துக்​கு தகு​தி பெற ​மாட்​​டார்​கள்​.

     

  • GEM கிரானைட் வீரமணி வழக்கு: அருண் IPS மீது ரூ.24 கோடி தங்கம் வாங்கியதாக புகார்

    GEM கிரானைட் வீரமணி வழக்கு: அருண் IPS மீது ரூ.24 கோடி தங்கம் வாங்கியதாக புகார்

    POSCO வழக்கில் தொடர்புடைய GEM கிரானைட் வீரமணி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரி அருண் IPS மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், தொழிலதிபர் வீரமணி மீதான வழக்கை சாதகமாக முடித்து வைக்க அவரது நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறியதாகக் கூறப்பட்டுள்ளது. முறைகேடாக வழக்கை முடித்து வைக்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளது காவல்துறைவட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இடைத்தரகர் தலைமறைவு

    வழக்கை முடித்து வைப்பதற்காக பெறப்பட்ட லஞ்சப் பணத்தைக் கொண்டு, சென்னையின் பிரபல நகைக்கடையில் சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான தங்கம் வாங்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தொகை பிரகாஷ் கண்ணையா என்பவர் வழியாகக் கைமாறியதாகவும், விசாரணை தொடங்கியதும் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    லஞ்சப் பணத்தை மறைக்கும் நோக்கிலேயே இந்த பெருமளவிலான தங்கம் வாங்கப்பட்டதா என்பதைத் தெளிவுபடுத்த, தொடர்புடைய நகைக்கடையின் விற்பனை ரசீதுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தீவிரமாகக் கோரப்பட்டுள்ளது.

  • ‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

    ‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

    தேனி கிளைச் சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.

    தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தப்பியோடிய கைதிகளில் இருவரை தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினர் பிடித்துள்ளதாக தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி முன்னதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மேலும் 2 பேரை காவல்துறை பிடித்துள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ஆம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.

    இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

    இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட  ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர்
    படக்குறிப்பு, இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட கைதிகள் ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர்

    கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி, உடல்நிலை சரியில்லை என நாடகமாடி கைதிகள் தப்பித்து சென்றதாக கூறினார்.

    கைதிகள் 17 பேரும் ஒரே சிறை செல்லில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை தொடர்ந்து சிறை காவலர் செல்லுக்கு வந்தபோது அவரை தாக்கிவிட்டு இவர்கள் 17 பேரும் தப்பியதாகவும் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    'உடல்நலக் குறைவு' என நாடகமாடி தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?

    இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் இரு காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.

    தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சாவடிகள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

     விஜயேந்திர பிடாரி
    படக்குறிப்பு, விஜயேந்திர பிடாரி

    தப்பி ஓடிய கைதிகள் யார்?

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (எ) மதன், ராஜ்குமார், திருப்பதி, பொன்முத்துச்செல்வம், மீனாட்சிசுந்தரம், நிசாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, பிரசாந்த் (எ) லிங்க பிரசாத், ராஜா சிக்கந்தர் மற்றும் சோலைமுகிலீஸ்வரன்,

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தருண்குமார்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி செல்வம்

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன்

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜின்

    தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்.

  • சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

    சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

    சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் 5 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 210 கன அடி, பூண்டி ஏரிக்கு 490 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 50 கன அடி, சோழவரம் ஏரிக்கு 10 கன அடி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன நீர் வந்துகொண்டிருக்கிறது.

    ஆகவே இன்று காலை நிலவரப்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,415 மில்லியன் கன அடி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 565 மில்லியன் கன அடி, 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 253 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    அதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 144 மில்லியன் கன அடி மற்றும் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,488 மில்லியன் கன அடி என நீர் இருப்பு உள்ளது.

    இதனால் 11,757 மில்லியன் கன அடி மொத்தக் கொள்ளளவு கொண்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில், கடந்த 15-ம் தேதி காலை நிலவரப்படி 3,959 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. இது இன்று காலை நிலவரப்படி 4,865 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. அதாவது 10 நாட்களில் மொத்த நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளது என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

     

  • த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

    அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழகத்தில் ஆளும் த.வெ.க., கட்சியில் இணைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை, மதராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை மே 25ல் ராஜினாமா செய்தனர்.
    இவர்களை தொடர்ந்து அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த ஜூன் 16 மற்றும் 29ல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
    சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க., கொறடா உத்தரவை மீறி, ஆறு பேரும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்தனர்.
    இதன் காரணமாக ஆறு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த நிலையில், த.வெ.க., கட்சியில் இணைந்தனர்.
    இதில், மரகதம் குமாரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் கடந்த அக்., 6ல் நடந்த இடைத்தேர்தலில் அதே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளனர்.
    முன்னதாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் சுதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    அதில், ‘எம்.எல்.ஏ-க்கள் சுயமாக ராஜினாமா செய்வதால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவுகளை, அந்த ராஜினாமா செய்த நபர்களிடமிருந்தே தேர்தல் செலவுப் பாதுகாப்புத் தொகையாக வசூலிக்க வேண்டும்.
    கட்சி தாவி ராஜினாமா செய்த இந்த ஆறு பேரும், ஐந்து ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது.
    இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என தீர்ப்பளித்தது.
    அதே சமயம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வதும் வெவ்வேறு நடவடிக்கைகள் என உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ராஜினாமா செய்துவிட்டதால், ஏற்கனவே நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் முடிவுக்கு வந்துவிடாது எனக் கூறி, இரு மாதங்களுக்குள் அம்மனுக்கள் மீது முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சுதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    அதில் கூறப்பட்டிருந்ததாவது:
    அப்போது மனுதாரர் தரப்பில் முன்வைத்த வாதம்:
    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். குறிப்பாக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி இழப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, எம்.எல்.ஏ.,க்கள் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 190(3)(பி)ஐ பயன்படுத்தி, திட்டமிட்டு பதவிகளை ராஜினாமா செய்தனர். பின், ஆளுங்கட்சியில் சேர்ந்து அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் சட்டப்பூர்வ வெற்றிடம் நிலவுகிறது.
    கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் மீது குதிரை பேரம் மற்றும் சட்டவிரோத துாண்டுதல்கள் தொடர்பாக ஏற்கனவே எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.
    இந்த ராஜினாமாக்களை தனிப்பட்ட நிகழ்வாக மட்டுமே பார்க்க முடியாது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    ஒருவர் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சராவதோ அல்லது வேறு கட்சியில் இணைவதோ அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ராஜினாமா உரிமையின் மீது நீதித்துறை உத்தரவுகள் மூலம் கூடுதல் நிபந்தனைகளை சுமத்த முடியாது.
    அரசியலமைப்பு சார்ந்த ரிட் வழக்குகளுக்கும், குற்றவியல் புலனாய்வுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. எப்.ஐ.ஆர்., மீது முறையான விசாரணை நடைபெற வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும்.
    இவ்வாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.

  • இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல்: நெதன்யாஹுவுக்கு பலத்த போட்டி தரும் காடி ஐசென்காட், தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பு

    இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல்: நெதன்யாஹுவுக்கு பலத்த போட்டி தரும் காடி ஐசென்காட், தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பு

    இஸ்ரேலில் நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்புகளின்படி, காடி ஐசென்காட்டின் யாஷார் கட்சி, நெதன்யாஹுவின் லிகுட் கட்சியை விட கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 தொகுதிகளின் ஆதரவு தேவை. நெதன்யாஹுவின் கூட்டணியோ, எதிர்க்கட்சியோ தனித்து 61 இடங்களை பெறுவது கடினம் என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் அரபு அரசியல் கட்சிகளின் ஆதரவே புதிய அரசைத் தீர்மானிக்கும்.

     

    நெதன்யாஹுவும் காடி ஐசென்காட்டின் சவாலும்

    தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான நட்புறவை முதன்மைப்படுத்தி நெதன்யாஹு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

    மறுபுறம், நாட்டின் பாதுகாப்பு தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி, நெதன்யாஹுவின் நீண்டகால ஆட்சிக்கு மாற்றாக தன்னை வெளிப்படுத்திப் போட்டியிடுகிறார் காடி ஐசென்காட்.

    இஸ்ரேலின் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறைப்படி, குறைந்தபட்சம் 3.25% வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கே பாராளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்படும்.

    இதனால் கூட்டணி அமைப்பதில் பெரும் இழுபறி நீடிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

  • செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

    செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

    சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 14.76 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்பதால், தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3.645 டிஎம்சி-யில், தற்போது 1.488 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதலமைச்சருக்கு ஏரியை பற்றிய தகவல்களை அதிகாரிகள் விளக்கி கூறினர். ஏரியின் நீர்மட்டம் 14.76 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஏரியில் வெள்ளக் கண்காணிப்பு அமைப்பின் செயல்பாடு, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

  • திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது – என்ன காரணம்? பின்னணி

    திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது – என்ன காரணம்? பின்னணி

    தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து சென்றுள்ளனர்

    அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்வார்கள்.

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் ஏற்கனவே அரசக்குமார் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது?

    இந்த வழக்கில் பி.என்.எஸ் சட்டப் பிரிவு 316(5), 318(4) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக லைவ் லா செய்தி ( Live law ) குறிப்பிட்டுள்ளது.

    பின்னர், ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 12 ஆகிய பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டன.

    அன்பில் மகேஸை வழக்கில் சேர்த்ததற்கான அடிப்படை மற்றும் விசாரணைக்குத் தேவையான முன்அனுமதி தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

    அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. வில்சன், செப்டம்பர் 18ஆம் தேதி காவல்துறை அழைப்பாணையை ஏற்று அன்பில் மகேஸ் விசாரணைக்கு ஆஜரானதாகத் தெரிவித்தார்.

    அப்போது சுமார் எட்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 240 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைத்ததாகவும் வாதிடப்பட்டதாக லைவ் லா செய்தி தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் திருச்சியில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அன்பில் மகேஸ் தலைமறைவாக மாட்டார், சாட்சிகளைக் கலைக்க மாட்டார், தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக உள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.” என அந்த செய்தி தெரிவிக்கிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும், பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

    விசாரணையில் முறைகேட்டுத் தொகை ரூ.400 கோடி வரை இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி (இன்று) முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அன்பில் மகேஸ் தரப்பு கூறுவது என்ன?

    தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஸ் தரப்பு நீதிமன்றத்தில் மறுத்துள்ளது.

    அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி, அவர் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதற்கான ஆவணங்களோ, முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ இல்லை என்று தெரிவித்துள்ளதால லைவ் லா செய்தி தெரிவித்துள்ளது.

    சிலர் அவரது பெயரைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரைக் குற்றம்சாட்ட முடியாது என்பதும் அவரது தரப்பு வாதமாக முன் வைத்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் இந்தப் புகார் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக” லைவ் லா செய்து குறிப்பிட்டுள்ளது.

    வழக்கின் பின்னணி

    தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

    இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அரசகுமார், பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

    நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியிருந்தனர்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்த தகவலின்படி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    அன்பில் மகேஸின் பெயர் எப்படி வந்தது?

    அரசகுமார் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசாரின் கூற்றுப்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அத்துடன், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பேசிய அவர், “மடியில் கனம் இல்லை” என்று கூறியதுடன், இந்தச் சோதனையால் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

  • குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய  ‘தாய்மாமன்’ எங்கே: கனிமொழி கேள்வி

    குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய ‘தாய்மாமன்’ எங்கே: கனிமொழி கேள்வி

    ‘‘குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமனை காணவில்லை,” என முதல்வர் விஜயை, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
    சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
    த.வெ.க., ஆட்சிக்கு வந்த, கடந்த ஐந்து மாதங்களில், தமிழக சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
    சென்னை எண்ணுார் தாழங்குப்பத்தில், இரண்டரை வயது குழந்தை, த.வெ.க., நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை நடந்துள்ளது. அக்குழந்தைக்கு இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அந்த அளவுக்கு, குழந்தை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், த.வெ.க., நிர்வாகி குற்றவாளியாக இருப்பதால், அவரை காப்பாற்றுவதிலேயே, அரசு முனைப்புடன் உள்ளது.
    செஞ்சியில், 15 நாட்களுக்கு முன் காணாமல் போன குழந்தையை, இன்று வரை, இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராணிப்பேட்டையில், ஒரு வயது குழந்தை காணாமல் போய், இதுவரை அக்குழந்தைக்கு என்ன ஆனது என்பது, யாருக்குமே தெரியாத சூழல் உள்ளது.
    துாத்துக்குடியில் ஒரே குடும்பத்தில், பெண் கொலை செய்யப்பட்டு, குழந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நாடா அல்லது காடா என, கேட்கும் சூழ்நிலை, உருவாகி இருக்கிறது.
    ‘தாய்மாமன் சீர்’ என, ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால், தாய்மாமனையே காணவில்லை. குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே சென்றார்; துாங்குகிறாரா; காணாமல் போய் விட்டாரா?
    ஆட்சியில் இருப்போர், மனசாட்சி இருந்தால், மக்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும்.
    இவ்வாறு கனிமொழி கூறினார்.

  • வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது

    வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது

    ‘வங்கக்கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, ‘அர்னாப்’ புயலாக உருவானது. இது நாளை மாலை, ஆந்திரா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கை:
    தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு முந்தைய, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டம் காரத்தோலுவு, கோவை மாவட்டம் ஒத்தகல்மண்டபம் பகுதியில், தலா, 16 செ.மீ., மழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டம், கொத்தவாச்சேரியில், 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
    மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, 5:30 மணிக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, ‘அர்னாப்’ என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் நேற்று மதியம் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு, 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.
    புயலானது ஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து, கிழக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கே, 610 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுவடைந்தது.
    எச்சரிக்கை
    இன்று மிக தீவிர புயலாக, அதே பகுதியில் வலுவடையும். அதன்பின், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே மிக தீவிர புயலாக, நாளை மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
    புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 115 முதல், 125 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில், 140 கி.மீ., வேகத்திலும், சூறை காற்று வீசும். இதன் காரணமாக, கடலோர ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரளம் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதிகளில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை, தெற்கு கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
    இந்த வானிலை நிகழ்வுகளால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் பலத்த காற்றுடன், இன்றும், நாளையும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில், ‘அர்னாப்’ புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    புயல் எச்சரிக்கை கூண்டு

    வங்கக்கடலில், ‘அர்னாப்’ புயல் உருவாகி உள்ள நிலையில், சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.