சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் 5 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 210 கன அடி, பூண்டி ஏரிக்கு 490 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 50 கன அடி, சோழவரம் ஏரிக்கு 10 கன அடி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன நீர் வந்துகொண்டிருக்கிறது.

ஆகவே இன்று காலை நிலவரப்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,415 மில்லியன் கன அடி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 565 மில்லியன் கன அடி, 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 253 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

அதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 144 மில்லியன் கன அடி மற்றும் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,488 மில்லியன் கன அடி என நீர் இருப்பு உள்ளது.

இதனால் 11,757 மில்லியன் கன அடி மொத்தக் கொள்ளளவு கொண்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில், கடந்த 15-ம் தேதி காலை நிலவரப்படி 3,959 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. இது இன்று காலை நிலவரப்படி 4,865 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. அதாவது 10 நாட்களில் மொத்த நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளது என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *