தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கு முன் அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்றும் 6 மணிக் காட்சி வரையறுக்கப்பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டு துணிவு – வாரிசு ஆகிய பட வெளியீட்டின் போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அந்த ரசிகர் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லாரி மேல் ஏறி நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கீழே விழுந்து தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
ADVERTISMENT
பின்பு தவெக ஆட்சி அமைந்தவுடன் தினசரி வழக்கமாக வழங்கும் 4 காட்சிகளை விட கூடுதலாக 1 காட்சி என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்தது. இதன்படி காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி அடுத்த நாள் நள்ளிரவு 2 மணி வரை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இது படம் வெளியாகும் முதல் நாளிலிருந்து 7 நாட்களுக்கு, உள்ளூர் பண்டிகை நாட்களுக்கு, பொதுவிடுமுறை நாட்களுக்கு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரையிட அனுமதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் காலை 6 மணி முதல் காட்சி தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறைய்னர் சங்கங்கள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர். அதனை முதல்வரிடம் பேசிவிட்டு பரிசீலினை பண்ணுவதாக உறுதியளித்திருந்தார். இந்த சூழலில் காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்கள் வெளியிடப்பட்ட உத்தரவில், “முதலமைச்சர் விஜய் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள்(ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க ராணுவத் தளவாடங்களை நேரடியாக விலைகொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், இஸ்ரேலுக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.
மேலும், இந்த நிதி உதவி விவகாரம் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக ஜனநாயகக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத் போன்றவர்கள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் நிதி உதவியைக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதனால் குடியரசுக் கட்சியினர் வீண் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா ஆண்டிற்கு சுமார் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028-ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே நிதி உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
2026 அமெரிக்க இடைத்தேர்தலில் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, இக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கச் செய்து, காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குப் புதிய தலைமைப் பொறியாளரை நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர்ச் சிக்கல் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசின் உரிமைகளை நீதிமன்றங்களிலும் ஆணையங்களிலும் நிலைநிறுத்தி வரும் ‘காவிரி மற்றும் பன்மாநில நதிகள் தொழில்நுட்பப் பிரிவை’ (Cauvery and Interstate Rivers Technical Cell – CIRTC) வலுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இப்பிரிவில் காலியாக உள்ள தலைமைப் பொறியாளர் பதவியை நிரப்ப நீர்வளத்துறை எடுத்த முயற்சிக்கு நிதித்துறை ஒப்புதல் தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாறும் தற்போதைய நிலையும்!
காவிரி மற்றும் பிற பன்மாநில நதிநீர் பிரச்சினைகளில் தமிழ்நாடு சார்பில் சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வாதங்களை முன்வைப்பதற்காக, 1990ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசால் காவிரி மற்றும் பன்மாநில நதிகள் பிரிவு உருவாக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 33 பணியாளர்களுடனும், புதுடெல்லியில் 5 பணியாளர்களுடனும் இயங்கி வரும் இப்பிரிவு, இதுவரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற 30க்கும் மேற்பட்ட நதிநீர் வழக்குகளுக்குத் தேவையான உத்திகளையும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கி, தமிழக அரசுக்கு முக்கியத் தூணாகச் செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் நீர்வளத்துறையில் தலைமைப் பொறியாளர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுப்பிரமணியன், செல்வராஜ், இளங்கோவன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் இப்பிரிவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமைப் பொறியாளர் பொறுப்புகளை வகித்தனர்.
இக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் சுப்பிரமணியனுக்கு 84 வயது கடந்துவிட்டது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி போன்ற தொலைவிடக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்க முடியாமல் ஆன்லைன் வழியிலேயே பங்கேற்று வருகிறார். அவருடன் பணியாற்றிய பிற ஓய்வுபெற்ற பொறியாளர்களும் உடல்நலக் குறைவால் பணியில் இருந்து விலகிவிட்டனர்.
சிக்கலும் விவசாயிகள் எதிர்பார்ப்பும்!
தற்போது கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் மூலம் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீரைக் காப்பதிலும், மேகதாது வழக்கை வலுவாக எதிர்கொள்வதிலும் இத்தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகிறது.
84 வயதாகும் சுப்பிரமணியனுக்குப் பின் இக்குழுவைக் கையாள அனுபவமிக்க தலைமைப் பொறியாளர்கள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதை உணர்ந்த நீர்வளத்துறை, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டு காலியாக உள்ள தலைமைப் பொறியாளர், துணைத் தலைவர் பணியிடத்தில், தற்போது பணியில் இருக்கும் (In-service) தலைமைப் பொறியாளர் ஒருவரை நியமிக்கத் தீர்மானித்தது.
இதற்காகக் கடந்த மார்ச் 2026ல் அனுப்பப்பட்ட கோப்பு, நிதித்துறை இணைச் செயலாளர் அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் நிலுவையில் உள்ளது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கவில்லை. நிதித்துறை இணைசெயலர் அலுவலகத்தில் ஐந்து மாதங்களாக அந்த பரிந்துரை கோப்பு கிடப்பில் உள்ளது.
தொடர்கிறதா நிதித்துறையின் ஆதிக்கம்!
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மற்ற அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிதித்துறை, த.வெ.க. ஆட்சியிலும் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துத் தொடர்கிறது. இதனால், கடந்த ஆட்சியில் நடந்தது போலவே, மற்ற துறைகளின் மக்கள் நலப் பணிகள் தொய்வடையச் செய்யும். இது, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள த.வெ.க. அரசிற்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே ஒரு அரசின் ஆகப் பெரிய வெற்றியல்ல. அரசுத் துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் அதிகாரப் போட்டியைக் கண்டறிந்து களைந்து, மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதே அரசின் வெற்றியாக இருக்கும். வெற்றிக் கழகம் நிதித்துறையில் நிலவும் அதிகாரப் போட்டிகளை ஒடுக்கி, வெற்றி பெறுமா என்று நீர்வளத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் எடுக்கவுள்ள முடிவில் தான் தெரிய வரும்.
சங்க காலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கோவளம் உப்பளங்கள், 2500 ஆண்டுகால தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டவை. அந்த உப்பளப் பகுதி தமிழர்களின் வரலாற்றோடும் கடல்சார் பொருளாதாரத்தின் முக்கிய தூணாகவும் விளங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் நோக்கில், உப்பளங்களை அழித்து அரசு அமைக்க இருக்கும் நீர்த் தேக்கத் தொட்டியால், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதி முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
‘செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட கோவளம் உப்பளப் பகுதியில் ரூ.342.60 கோடி மதிப்பில் ‘மாமல்லன்’ புதிய குடிநீர் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கடந்த ஆண்டு தி.மு.க., அரசு அறிவித்தது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் அடிக்கலும் நாட்டினார். முன்பு இதை எதிர்த்திருந்த த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு 15% நிறைவடைந்திருந்த மாமல்லன் திட்டப் பணிகளைத் தற்காலிகமாகக் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்தி வைத்தது. ‘இந்தத் திட்டத்தைக் கைவிடுவது தமிழகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும்’ என, வழக்கமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதனால், திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை என்றும், குழுவின் ஆய்வறிக்கைக்குப் பின்னரே அடுத்த கட்டப் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் நீர்வளத்துறை தெளிவுபடுத்தியது. இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அளவீட்டு உயர்வுகளின் காரணமாக, திட்ட மதிப்பீட்டில் மாற்றங்களும் கூடுதல் செலவினங்களும் கணக்கிடப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் வெளியானது.
இதனால், மீண்டும் இந்தத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடம் நிலவுகிறது. இதனால், இந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடக் கோரி, 24 சுற்றுச்சூழல் அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கூறி கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தைச் சூழல் அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?
திட்டப் பின்னணியும் அரசு நடவடிக்கைகளும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர், மானமதி, சிறுதாவூர், காளவாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 69 ஏரிகளின் உபரி நீர், உப்பளம் மற்றும் அரசுக்குச் சொந்தமான காலி நிலம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்பட்டு, இறுதியாக முட்டுக்காடு, கோக்கிலமேடு முகத்துவாரங்களின் வழியாகக் கடலில் கலக்கிறது.
இதனால், கோவளம் உபவடிநிலப் பகுதியில் புதிய குடிநீர் நீர்த்தேக்கம் உருவாக்க அரசு திட்டமிட்டது. அதன்படி, அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கம் சென்னை வடிநிலப்பகுதியில் நன்னீரைச் சேமிக்க உதவுகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலைப் பரவலாக்கவும் முடியும் என, தமிழ்நாடு அரசு நம்புகிறது.
இதற்காக இ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளுக்கு இடைப்பட்ட உப்பளப் பகுதி உள்ளிட்ட 5,161 ஏக்கர் அரசு நிலங்கள் ஒதுக்கப்பட்டு, நீர்வளத்துறைக்கு நிலம் மாற்றும் அரசாணையும் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (SEAC) சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதிகள் பெறப்பட்டு, 34 கி.மீ.க்கு மண் கரை அமைப்பது மற்றும் பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புப் போன்ற பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
சூழலியல் அமைப்புகளின் முக்கியக் கோரிக்கைகள்
‘மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக நீர்வளத் துறை (WRD) அதிகாரி இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதால், அக்குழுவை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும்’ என்று கோரியுள்ளனர்.
மேலும், இத்திட்டம் குறித்து வெளிப்படையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வை மேற்கொள்ள, சுயாதீன நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் பல்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இறுதியாக, திட்டத்தின் சுற்றுச்சூழல், நீரியல் மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்டப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அந்த அமைப்புகள் கடுமையாக வலியுறுத்தியுள்ளன.
சூழலியல் பாதிப்புகள் என்ன?
‘மாமல்லன் திட்டம் இயற்கையான நீரோட்டத்தை மாற்றியமைப்பதால், அப்பகுதியில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்’ என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, சோழிங்கநல்லூர், நாவலூர், சிறுதாவூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
உப்பளப் பகுதிகளும் அலையாத்திக் காடுகளும் இயற்கையான மணல் திட்டுக்களும் சுனாமி போன்ற பேரிடர்களின் போது கடல்நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தின. ஊர்ப் பகுதிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்து தற்காப்பு அரணாகவும் செயல்பட்டன.
இந்தப் பகுதியில் உள்ள இயற்றை அரண்களை அழித்து சதுப்பு நிலங்களை நீர்த்தேக்கமாக மாற்றினால், சிறிய கடல் சீற்றமும் அங்குள்ள கிராமங்களை நீரில் மூழ்கடிக்கும் நிலை ஏற்படலாம் என, மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோவளம் – நெம்மேலி உப்பளப் பகுதி மற்றும் ஈரநிலங்கள் அழிவதால், அங்கு வாழும் பறவையினங்கள் மற்றும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. குறிப்பாக, மத்திய ஆசிய பறவைப் பறப்புப் பாதையில் (Central Asian Flyway) வரும் ஆயிரக்கணக்கான வலசைப் பறவைகளின் வருகை இதனால் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
தவிர, கடலோரப் பகுதி மற்றும் உப்பளங்களை நம்பி வாழும் மீனவர்களின் மீன்பிடித் தொழிலையும், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இத்திட்டம் அழித்துவிடும்.
அதுமட்டுமின்றி இயற்கையான உப்பளங்கள் நன்னீர் நீர்த்தேக்கமாக மாற்றப்படுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீர் உவர்நீராக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் மற்றும் கடல் சீற்றங்களின் போது பாதுகாப்புச் சுவர்கள் இல்லாவிட்டால் கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, பெரிய நெம்மேலி பகுதி மக்கள் உப்பளப் பகுதிகளைப் பிரதானமாக நம்பியுள்ளவர்கள். இந்தத் திட்டத்தால் இறால் மீன்பிடித் தொழில் மற்றும் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
ஆகவே, இத்திட்டம் சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யவதாகக் கூறி முன்னெடுக்கப்பட்டாலும், இது நீண்டகால அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வாதிடுகின்றன.
ஆக, சூழல் அமைப்புகள், மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று ஆளும் அரசு மாமல்லன் திட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமா?
தென்னிந்தியாவின் முன்னணி பொருளாதார மற்றும் தொழில்துறை மையமாகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்து வந்த தமிழ்நாடு, அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக சந்ததித்து வரும் சவால்களும் மந்தநிலையும் சாமானிய பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும், தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைப் பொருளாதாரக் போட்டிக் களத்தில் பின்தள்ளியிருப்பதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியின் முதன்மை மையமாக அறியப்படும் தமிழ்நாடு, சமீபகாலமாகச் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், ஏற்கனவே பேச்சுவார்த்தையில் இருந்த திட்டங்களை இறுதி செய்வதிலும் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. தென்கொரியாவின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய உதிரிபாகங்களை வழங்கி வரும் வாஷின், செஇயான் மற்றும் இவாமெட் ஆகிய மூன்று முக்கிய கொரிய உற்பத்தி நிறுவனங்கள், தமிழகத்திற்குப் பதிலாக ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சுமார் 1,614 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது தொழில் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து ஆரம்பத்தில் தமிழக அரசுடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தபோதிலும், த.வெ.க. அரசின் பின்தொடர்தல் இன்மையாலும், தெளிவற்ற கொள்கைகளாலும் அந்த முதலீடுகள் கைநழுவிப்போய் ஆந்திராவின் வசமாகியுள்ளன. இதன் காரணமாக ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் மட்டும் சுமார் 1,418 புதிய நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், தமிழக இளைஞர்கள் பெறவிருந்த மிகப்பெரிய வேலைவாய்ப்புச் சந்தையை மாநில அரசு இழந்துள்ளதாகத் தொழில் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆந்திரப் பிரதேச அரசு கொரிய முதலீட்டாளர்களைக் கவரும் பொருட்டுச் செயல்படுத்திய விரைவான அனுமதி முறைகளும், உயர் மட்ட உத்திகளுமே இந்த முதலீட்டு மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ஆந்திர அரசின் தொழில் துறை அமைச்சகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஆகியவை நேரடியாகச் தென் கொரியாவின் சியோல் நகருக்குத் தூதுக்குழுவை அனுப்பி, ஹூண்டாய் மற்றும் கியா விநியோகச் சங்கிலி நிறுவனங்களுடன் நேரடி வட்டமேசை மாநாடுகளை நடத்தின. அந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகச் சில மாதங்களுக்குள்ளேயே திட்டங்களுக்கான ஒப்புதல்களையும், தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடுகளையும் ஆந்திர அரசு உறுதி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக மாற்றியது. ஆனால், அதே நிறுவனங்கள் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் ஏற்கனவே தங்களது கிளைகளைக் கொண்டு இயங்கி வந்தபோதிலும், தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்காகத் தமிழக அரசை அணுகியபோது விரைவான முடிவுகளோ அல்லது ஊக்கச்சலுகைகளோ வழங்கப்படவில்லை.
தமிழக அரசு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக விளம்பரப்படுத்தினாலும், களத்தில் அத்தகைய ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதில் நிலவும் தேக்கநிலை முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்தத் தயக்கத்தை உருவாக்கியுள்ளது. நிதி மேலாண்மை மற்றும் வரி வருவாய் ஈட்டல் களத்திலும் தமிழகத்தின் செயல்திறன் அண்மைக்காலமாகப் பெரும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஜி.எஸ்.டி. வசூல் நிலவரங்களின்படி, நாட்டின் பெரும்பாலான பெரிய மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து பொருளாதார மீட்சியை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் கடுமையான வருவாய் சரிவைச் சந்தித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் நேரடி உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி முறையே மைனஸ் 1 சதவீதம் மற்றும் மைனஸ் 5 சதவீதம் என்ற அளவில் படுமோசமான எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் பெயரளவிற்கு 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே தமிழகத்தால் எட்ட முடிந்தது.
இதே காலகட்டத்தில், அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் 24 சதவீத வளர்ச்சியையும், கர்நாடகா 18 சதவீத வளர்ச்சியையும், கேரளா 23 சதவீத வளர்ச்சியையும், தெலங்கானா 14 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்து சிறப்பான நிதி ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 22.9 சதவீதமாக உயர்ந்துள்ள சூழலில், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு இந்த தேசிய சராசரியைக் காட்டிலும் வெகுவாகப் பின்தங்கியிருப்பது மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் நிலவும் கடுமையான கோளாறுகளைக் காட்டுகிறது. மாநிலத்தில் வணிக நடவடிக்கைகள் சுணங்கிப் போயிருப்பதும், நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவில் குறைந்துவிட்டதும், வர்த்தகத் துறையில் நிலவும் கட்டுப்பாடற்ற வரி ஏய்ப்பு மற்றும் அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்குமே இந்த வருவாய் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாக அமைகின்றன. பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு நிதிகள் சரியான முறையில் பொருளாதாரச் சுழற்சிக்கு வராமல் முடங்கிப்போனதற்குத் த.வெ.க. அரசின் தொலைநோக்கற்ற நிதித் திட்டமிடலே சான்றாகப் பார்க்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் தொழில்துறை முதலீடுகள் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்வது என்பது வெறும் காகித அளவிலான இழப்பு மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சந்தையிலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளை மாற்றும்போது, அவற்றைச் சார்ந்து இயங்கும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் உதிரிபாகத் தயாரிப்புப் பட்டறைகளும், விநியோகச் சங்கிலி நிறுவனங்களும் தங்களது வணிக ஆர்டர்களை இழந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய தொழில்துறை மண்டலங்களில் இயங்கி வரும் சிறு தொழில் முனைவோர்கள், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு காரணமாகத் தங்களது உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளைத் தக்கவைக்கவும், அவற்றின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கவும் தவறும் ஒரு அரசு, புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதாகக் கூறுவது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே எஞ்சி நிற்கும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் த.வெ.க. அரசின் வாக்குறுதிகளுக்கும் கள நிலவரத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுவதாக சமூக செயல்பாட்டாளர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்தும் கிடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை நிலவுவதும், நவீன மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பின்றி முடங்கிக் கிடப்பதும் சாமானிய ஏழை எளிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அரசு தனது நிதியாதாரங்களை நீண்டகால மூலதனச் செலவினங்களுக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செலவிடாமல், குறுகிய காலக் கவர்ச்சித் திட்டங்களுக்கும் விளம்பரப் பிரசாரங்களுக்கும் மட்டுமே வாரி வழங்குவது மாநிலத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இன்னொரு புறம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து வருகிறது. காவல்துறையின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவிட்டதாகவும், குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதில் காவல்துறைக்கு உரிய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் நில ஆக்கிரமிப்புச் சம்பவங்கள், சிறை கைதிகள் தப்பித்தல் அதிகரித்து வருவதை ஒடுக்க அரசு நிர்வாகம் திணறி வருகிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறும் ஒரு மாநிலத்தில் எந்தவொரு பன்னாட்டு முதலீட்டாளரும் நீண்டகால அடிப்படையில் தொழில் தொடங்க முன்வர மாட்டார்கள் என்ற அடிப்படைப் பொருளாதார விதியைத் தவெக அரசு மறந்ததன் விளைவையே தற்போதைய தொழிற்துறை பின்னடைவுகள் வெளிப்படுத்துகின்றன.
அமைச்சர்களின் துறைசார் அனுபவமின்மையும், தலைமைச் செயலகத்தில் கோப்புகள் மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் தாமதமும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடக்கிப் போட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் தொடர்ச்சியான இடமாற்றங்களும், கொள்கை முடிவுகளில் நிலவும் தெளிவின்மையும் மாநிலத்தின் நிர்வாக வேகத்தைக் குறைத்துள்ளன. பிம்ப அரசியலையும் ஊடக மேலாண்மையையும் மட்டுமே நம்பி ஆட்சியை நடத்த முயலும் த.வெ.க. அரசு, களத்தில் எழும் பொருளாதார சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளைக் காணத் தவறிவிட்டது.
எனவே, தமிழ்நாடு தனது பாரம்பரியமான பொருளாதார மேன்மையையும் தொழில் தலைமைத்துவத்தையும் மீட்டெடுக்க வேண்டுமானால், த.வெ.க. அரசு உடனடியாகத் தனது விளம்பர உத்திகளைக் கைவிட்டு, களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியது அவசியமாகும். வெளிப்படையான தொழில் கொள்கை, விரைவான ஒற்றைச் சாளர அனுமதி முறை, சிறு தொழில்களுக்கான வரி மற்றும் மின்கட்டணச் சலுகைகள், மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே அண்டை மாநிலங்களின் கடுமையான போட்டியை எதிர்கொள்ள முடியும்.
இளைஞர்களின் எதிர்காலத்தையும் மாநிலத்தின் நிதி ஸ்திரத்தன்மையையும் பலிகொடுத்து நிகழ்த்தப்படும் இந்த ஆட்சியைத் திருத்திக்கொள்ளத் தவறினால், தமிழ்நாடு தென்னிந்தியாவின் பொருளாதார வரைபடத்தில் தனது முதன்மை இடத்தை நிரந்தரமாக இழக்கும் அபாயம் உருவாகும்.
புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து அவர் உற்சாகம் அடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவர் பங்கேற்ற ரோடு ஷோ நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ரூ.100 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயணிகளுக்கு வழங்கினார்.
பின்னர், 24.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தையும், மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிதாக 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்பு கூடியிருந்த பொதுமக்களுடன் அவர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் அங்கிருந்து ரோடு ஷோ மூலமாக புதுக்கோட்டை பயணியர் மாளிகை சென்றடைந்த அவர், சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மாலை சென்னை சாலை மார்க்கமாக திருச்சி சென்று, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.
காத்திருந்த பெண் மயக்கம்
இதனிடையே, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வருகைக்காக காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்தை முதலமைச்சர் விஜய்யை பார்க்க அதிகாலையில் இருந்து, சிறியவர்கள், பெரியவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது, வெயிலின் தாக்கத்தால் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண் மயங்கி விழுந்தார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் தரப்பில் இருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காவல்துறை தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தலைமறைவாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் உடனான தொடர்புகள், யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது? வேறு யார் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்?, பணப்பரிமாற்றங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், கடந்த அக்.29- ஆம் தேதி காலை சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபுடுகுமார், “கடந்த செப்.16- ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் செப்.18- ஆம் தேதி விசாரணை ஆஜராகினார். அப்போது, அவரிடம் எட்டு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 240 கேள்விகள் கேட்கப்பட்டன.
பள்ளிகளுக்கான உரிமம் வழங்குவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடுகளைத் தடுக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என இருந்த புதுப்பிப்பு நடவடிக்கை தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று 20 ஆண்டுகளாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது கோரிக்கை வைத்த பள்ளிகளையே சாட்சிகளாக மாற்றி, காவல்துறை அவரை குற்றவாளியாக சித்தரிக்கிறது” என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு போதுமான மருத்துவச் சிகிச்சைகள் அனைத்தும் சிறையில் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் என்ன உணவு வழங்கப்பட்டது? என்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். சிறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நவம்பர் 2- ஆம் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு இன்று (நவம்பர் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “சிறப்பு சலுகைகள் அளித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்தார். மேலும், எங்கு விசாரணை நடத்தப்படுகிறதோ? அங்கே வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது. அதனால் அன்பில் மகேஸிடம் நடத்தப்படும் விசாரணையையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அனைத்து விசாரணைகளையும் வீடியோ பதிவு செய்ய முடியாது. குறிப்பிட்ட விசாரணையை மட்டுமே வீடியோ பதிவை செய்யலாம்” என்றார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை மனதாலும், உடலாலும் காவல்துறை எந்த துன்புறுத்தலும் செய்ய கூடாது, காவல்துறை விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் அன்பிஸ் மகேஷ் பொய்யாமொழியின் வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதி வழங்கப்படுகிறது. அவரது வழக்கறிஞர் விசாரணையில் பேசுவதைக் கேட்க முடியாத தொலைவில் இருந்து கண்காணிக்கலாம். ஒவ்வொரு நாளும் காவல்துறை விசாரணை முடியும்போதும் 10 நிமிடங்கள் மட்டும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அவரது வழக்கறிஞ்ர் சந்தித்து பேசலாம் போன்ற நிபந்தனைகளையும் விதித்தார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஜாமீன் வழக்கு மற்றும் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரிய மனு மீது நவம்பர் 5- ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த சந்திரன், விராலிமலை ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் ஆகியோரின் ஒன்றிய செயலாளர்களை பதவிகளை கடந்த வாரம் திமுக தலைமை பறித்துவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அன்னவாசல் திமுக பேரூர் செயலாளர் முகமது ரிசா, சந்திரன் மகன் இளையசூரியன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஜி விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதனைப் பார்த்த திமுகவினர், நடவடிக்கைக்கு முன்பே கட்சி மாறி உள்ளனர், திமுகவில் இருந்து கொண்டு விஜயபாஸ்கருக்கு வேலை செய்தார்கள் இப்போது நேரடியாக அவருக்கு வேலை செய்ய அவருடன் சென்றுவிட்டனர் என்று விமர்சனம் செய்தனர்.
இதற்கிடையில் நேற்று முன் தினம் மாஜி அமைச்சரும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான ரகுபதி, துரோகிகளையும் ஒற்றர்களையும் களையெடுத்தாச்சு என்று கூறினார். இந்த நிலையில் தான் நேற்று தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மாஜி விஜயபாஸ்கர், அன்னவாசல் மாஜி திமுக செயலாளர் சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து தவெகவில் இணைய அழைத்துள்ளார். சால்வை அணிவித்து வரவேற்ற சந்திரன் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் முகமது பர்வேசும் சந்திரன் மகன் இளைய சூரியனிடம் பேசி உங்கள் தந்தையையும் கட்சியில் இணையச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
திமுக மாஜியை மாஜி விஜயபாஸ்கர் சந்தித்த படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், திமுக மாஜி ஒன்றிய செயலாளர் சந்திரன் நம்மிடம், “என் தந்தை லாந்தர் விளக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டை ஊர் ஊராக தூக்கிக் கொண்டு போய் கூட்டம் நடத்தி திமுகவை வளர்த்தார். அது போல தான் நானும் கட்சிக்காக உண்மையாக உழைத்தேன். 17 ஆண்டுகள் 3 முறை ஒன்றிய செயலாளர், மாவட்டக் கவுன்சிலர், இப்போது திடீரென எங்களிடம் எதுவும் கேட்காமல் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர். நானும் திமுக கரை வேட்டியோடு அமைதியாக இருப்போம் என்று தான் இருந்தேன். இதை சகிக்க முடியாமல் தான் என் மகன் த.வெ.க போனார். மன வருத்தத்தில் இருக்கும் போது திமுக மாசெ ரகுபதி பேசியது ரொம்ப பாதிச்சிருச்சு. கட்சிக்காக உழைச்சது நாங்க, ஆனால் மா.செ.க்கள் ரகுபதியும், செல்லப்பாண்டியும் விஜயபாஸ்கர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்கள் தான். ஆனால் இப்ப எங்களை குறை சொல்கிறார்கள். இந்த வருத்தத்தில் இருக்கும் போது தான் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீங்கள் அதிமுக போகமாட்டீங்க தவெக வந்துவிடுங்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கான மரியாதையை கொடுப்போம் என்று பேசினார். தொடர்ந்து அமைச்சர் பர்வேசும் என் மகனிடம் பேசியுள்ளார். அதன் பிறகு தான் நானும் ஒரு முடிவெடுத்துள்ளேன். அதாவது, அன்னவாசல் நகரம், ஒன்றியத்தில் உள்ள திமுக நிர்வாகிகள், அணிப் பொறுப்பாளர்கள் என சுமார் 500 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அன்னவாசலில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை சென்று தவெக மாவட்ட அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணையப் போகிறோம். சமீப காலமாக திமுக பணக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது” என்றார்.
தந்தை காலத்தில் இருந்து திமுகவில் இருந்து உடனே தவெக போனால் உரிய மரியாதை கிடைக்குமா? ஏற்கனவே தவெக போனவர்களுக்கு மரியாதை இல்லை என்கிறார்களே என்ற நமது கேள்விக்கு, “இத்தனை ஆண்டுகள் திமுகவிற்கு உழைத்தோம். இப்போது எதையும் எதிர்பார்க்காமல் தான் தவெக செல்கிறேன். 3 முறை திமுக ஒசெ வாக இருந்த நான் அடுத்து மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவேன் என்பதால் தான் சூழ்ச்சியால் என் பொறுப்பை பறித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்கள் திமுக மா செ க்கள்” என்றார். திமுகவினரோ மீண்டும் சொல்கிறோம், இவர்கள் திமுகவில் இருந்து விஜயபாஸ்கர் வெற்றிக்கு வேலை செய்தார்கள். இப்ப நேரடியாக அவர் கூடவே இணைந்து வேலை செய்வார்கள். இவர்கள் செல்வதால் திமுக தேய்ந்துவிடாது. அதிமுகவில் உள்ளவர்களை அழைத்துச் சென்ற விஜயபாஸ்கர் இடைத்தேர்தலை சமாளிக்க அடுத்து திமுகவினரை இழுத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக இருந்த திமுகவினர் அவருடன் போவார்கள். அவர்கள் திமுகவில் இருந்தாலும் திமுகவிற்கு பயனில்லை. விஜயபாஸ்கருக்கு தான் வேலை செய்வார்கள். அவர்களில் சில பேர் இன்னும் திமுகவில் உள்ளனர்.. அவர்களும் இடைத்தேர்தலுக்குள் போவார்கள் என்கின்றனர்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
“மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்” என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.
எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!” என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.
நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.
புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.
ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் செல்வோம்) என்று முழக்கமிடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ‘ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (SFI) அமைப்பும் இந்தப் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளது.
இண்டியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு, இன்று மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேரணிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலேயே டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் திரளத் தொடங்கினர். தலைநகரின் பிற பகுதிகளிலும் கட்சிகளின் தொண்டர்கள் ஒன்று கூடினர்.
சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு வெளியே கூடினர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் இமாச்சல பவனுக்கு வெளியே ஒன்றுகூடி, அங்கிருந்து பேரணி நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டனர். இந்த போராட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் கட்சித் தொண்டர்களை அந்தந்த கட்சிகள் திரட்டி வந்துள்ளன.
ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணியின் பேரணிக்காக, மத்திய டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், வாகன வழித்தட மாற்றங்கள் மற்றும் பேருந்து வழித்தட மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேரணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், மாற்று வழிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறித்த அறிவிப்புகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.