Author: admin

  • உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

    உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

    பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இறந்துவிட்டதாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் ஜெயின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வாயிலாக இதனை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனில் உள்ள சகஸ்தரதாரா ஹெலிபேடுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சமோலி மாவட்டத்தின் ஹாத்தி பர்வதம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், விமான மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க, போலீஸார், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் ஆகியவை அடங்கிய இரண்டு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

    இந்த ஹெலிகாப்டரை டெல்லியைச் சேர்ந்த கேப்டன் ஹிமான்ஷு சபர்வால் இயக்கியுள்ளார். இதில், பிரதாபா, அருண், சங்கர் கவுடா, சுதிர் கே, ஹெச்.எஸ்.நடராஜா ஆகிய பயணிகள் பயணித்துள்ளனர். பயணிகள் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி

    விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி

    தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் அவர், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வர உள்ளார். மேலும் அவர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை தொகுதியில் ரோட்ஷோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் அவர், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வர உள்ளார். மேலும் அவர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை தொகுதியில் ரோட்ஷோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் செல்ல உள்ளார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்ல உள்ளார்.

    புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர்

    புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட புதிய உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் உரை நிகழ்த்துகிறார்.

    திருச்சி ஐஜி நேரில் ஆய்வு

    முதலமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று அக்டோபர் 29ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோருடன் இணைந்து ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினார்.

    விராலிமலையில் விஜய் ரோட்ஷோ

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் காலியாக உள்ள விராலிமலை தொகுதி வழியாக ரோட்ஷோ நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்சினையால் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முதல்வர் விஜய்யின் ரோட்ஷோ தற்போது தனி கவனம் ஈர்த்துள்ளது.

  • “மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்

    “மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்

    “சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.

    வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.

    சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

  • “பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்

    “பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்

    “பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு ஒரு நாள் வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார்” என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை தேவர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரிசையில் நின்ற பொதுமக்களிடம் கை கொடுத்து வணக்கம் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்ட காலத்தில் மட்டுமில்லாமல் அதற்குப் பிறகும் சமுதாயத்திற்காக தன் வாழ்வின் குறிக்கோளாக முழு மூச்சாக செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை தலைவராக ஏற்றுக் கொண்டவர். தேசத்தின் எழுச்சிக்கும், தெய்வீக எழுச்சிக்கும் தமிழக மண்ணில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

    அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு எந்த துரோகத்தையும் செய்ய விரும்பவில்லை. அவர் மட்டும் அரசியலில் சமரசம் செய்திருந்தால் தமிழகத்தின் முதல்வராக முத்துராமலிங்கத் தேவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை, தவம், கண்ணியம் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தவர். ஆதிதிராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.

    அம்மக்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை ஆதிதிராவிட மக்களுக்காக கொடுத்துள்ளார். இப்படி மகத்தான தேசிய தலைவரின் பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் நடத்திருப்பது, மகா சித்த புருஷர் என்பதை நிரூபிக்கிறது.

    உண்மையான தேசியமும், தெய்வீகமும் என்றைக்கும் அழியாமல் பாதுகாப்பது நமது கடமையாகும். அவருக்கு நாம் தொடர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டும். பசும்பொன்னுக்கு ஒரு நாள் பிரதமர் மோடி வருகை தந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார் என தெரிவித்தார்.

     

  • ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

    ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

    திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் அவருக்​கும் அவருடன் தொடர்​புடைய​வர்​களுக்​கும் சொந்​த​மான 25 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகத் தகவல் வெளியாகி உள்​ளது.

    கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில், நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் சாலை உள்​ளிட்ட கட்​டு​மானப் பணிகளுக்கு ஒப்​பந்​தம் வழங்​கியதில் முறைகேடுகள் நடை​பெற்​றுள்​ளது. அரசுப் பணி​யிடங்​களை நிரப்ப லஞ்​சம் பெறப்​பட்​டுள்​ளது என்று புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக வழக்​குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு, மத்​திய அரசின் அமலாக்​கத் துறை 2 கடிதங்​களை அனுப்​பியது.

    முதல் கடிதத்​தில், நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் ரூ.1,020 கோடி அளவுக்கு ஒப்​பந்த முறைகேடுகள் நடை​பெற்​றதாகக் கூறி விசா​ரணை நடத்த வலியுறுத்​தப்​பட்​டது. அதனுடன் 252 ஆதார ஆவணங்​களும், 300 புகைப்​படங்​களும் இணைக்​கப்​பட்​ட​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது.

    அதன்​பின், 2-வது கடிதத்​தில், நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 பணி​யிடங்​களை நிரப்​பியதில் ரூ.634 கோடி லஞ்​சம் பெறப்​பட்​ட​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டது. உதவிப் பொறி​யாளர்​கள், இளநிலைப் பொறி​யாளர்​கள், நகரத் திட்ட அலு​வலர்​கள் உள்​ளிட்ட பணி​யிடங்​களை நிரப்​பியதில் முறைகேடுகள் நடை​பெற்​றதாக அந்​தக் கடிதத்​தில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

    இந்​தப் புகார்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதற்கிடையே, மேற்கூறிய கடிதங்​களின் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்து நட​வடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி, அதிமுகவைச் சேர்ந்த இன்​ப​துரை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றமும் லஞ்சப் புகார் தொடர்​பாக உரிய நட​வடிக்கை எடுக்க உத்​தர​விட்​டது.

    அதன்​பேரில், பணி​யிட நியமனங்​களில் ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, கே.என்.நேரு உள்​ளிட்​டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர். இந்த வழக்கை எதிர்த்து கே.என்.நேரு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த சீராய்வு மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

    இந்த வழக்​கின் தொடர்ச்​சி​யாக, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு​வின் வீட்​டில் நேற்று காலை 6.30 மணி​யளவில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர். திருச்சி லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் ஹேமச்​சித்ரா தலை​மையில் 15-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் 3 வாகனங்களில் வீட்​டுக்​குச் சென்​றனர்.

    வீட்​டில் சுமார் 8 மணி நேரத்​துக்​கும் மேலாக சோதனை நடை​பெற்​றது. சோதனை குறித்த தகவல் பர​வியதால், அவரது வீட்​டின் முன்பு திமுகவினர் திரண்​டனர். இத​னால் அந்​தப் பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டது.

    கே.என்.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனுக்​குச் சொந்​த​மான சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம், கிருஷ்ணாபுரத்​தில் உள்ள வீடு, அலு​வல​கத்​திலும் சோதனை நடத்​தினர். கோவை சிங்​காநல்​லூர் அருகே உள்ள தனியார் அடுக்​குமாடிக் குடி​யிருப்​பில் உள்ள கே.என்.நேரு​வின் சகோ​தரர் கே.என்.மணிவண்​ணனின் அலு​வல​கத்திலும் ஜி.வி.ரெசிடென்சி பகுதி​யில் உள்ள அவரது வீட்​டிலும் சோதனை நடை​பெற்​றது. அப்​போது மணிவண்​ணன் வீட்​டில் இல்லை. அங்​கிருந்​தவர்​களிடம் ஆவணங்​கள் தொடர்​பாக விசா​ரணை நடத்தப்பட்​டது. வடவள்ளியில் மணிவண்ணனின் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நாமக்​கல் எம்.ஜி. நகரில் உள்ள திமுக முன்​னாள் எம்​எல்ஏ பெ.ராமலிங்​கத்​தின் வீட்​டிலும் சோதனை நடந்​தது. துணைக் காவல் கண்​காணிப்​பாளர் சுபாஷினி தலை​மையி​லான போலீ​ஸார், வங்​கிப் பரிவர்த்​தனைகள் உள்​ளிட்ட ஆவணங்​களை ஆய்வு செய்​தனர்.

    மேலும், கே.என்.நேரு​வின் உறவினர் துரை வீட்​டுக்​குச் சென்ற போலீ​ஸார், வீடு பூட்​டப்​பட்​டிருந்​ததால் அங்கு நோட்​டீஸ் ஒட்​டிச் சென்​றனர். அவர் சிங்​கப்பூரில் இருப்​ப​தாகவும், நவம்​பர் 13-ம் தேதி திரும்​புவதாகவும், விசா​ரணைக்கு ஒத்​துழைப்​ப​தாகவும் தெரி​வித்​துள்​ளார்.

    திமுக முன்னாள் எம்எல்ஏ நந்​தகுமாரின் காட்பாடி வீட்​டில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் ராஜு தலை​மையி​லான குழுவினர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்​டில் ராணிப்​பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் கணேசன் தலை​மையி​லான குழு​வினர் 3 மணி நேரம் சோதனை நடத்​தினர்.

    இந்த சோதனை​களின் போது வழக்​குடன் தொடர்​புடைய 170 ஆவணங்​கள், 13 மின்​னணு சாதனங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டதாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

    திசை திருப்ப சோதனை

    சோதனைக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய கே.என்.நேரு கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கேட்டை திசை திருப்​பவே இந்த சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. எனது வீட்​டில் இருந்து ஆவணங்​கள் எதையும் கைப்​பற்​றவில்லை. எனது சகோ​தரர் மணிவண்​ணனுக்​குச் சொந்​த​மான 2 மடிக் கணி​னிகளைப் போலீ​ஸார் எடுத்​துச் சென்​றுள்​ளனர்.

    முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா ஆட்​சியில் எங்​கள் மீது தொடரப்​பட்ட வழக்​கு​களைச் சட்​டரீதி​யாக எதிர்​கொண்​டதைப் போல, இப்​போதும் சட்​டப்​படி எதிர்​கொள்​வோம். என்னை முடக்​கினாலும், தேர்​தல் பணிகளை மேற்கொள்ள ஏராளமான திமுக தொண்​டர்​கள் உள்ளனர். திமுகவை யாராலும் முடக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்.

  • சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

    சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

    தமிழகத்தில் புதிதாக 8 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் புதிய தொழில் முதலீடுகள், முஸ்லிம் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தாழம்பூர் புறம்போக்கு நிலப் பிரச்சனை, வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, சமூகநீதி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைத்தல் போன்ற சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

     

  • அன்பில் மகேஸ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

    அன்பில் மகேஸ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

    தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் நெருங்​கிய தோழியும், துணிக்​கடை அதிபரு​மான சண்​முகபி​ரியா என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, கோடிக் கணக்​கில் பணம் மற்​றும் பணப்​பரிவர்​தனை தொடர்​பான முக்கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது.

    தமிழகத்​தில் உள்ள பல்​வேறு தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் மற்​றும் அரசு அனுமதி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலிக்​கப்​பட்​ட​தாகப் எழுந்த புகார்​கள் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதன்​பேரில் கடந்த 26-ம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்​பில் மகேஸ் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

    மேலும், தனியார் பள்ளி நிர்​வாகங்​களிடம் பணம் வசூலித்​த​தாகக் கூறப்​படும் முன்​னாள் நிர்​வாகி​கள் மற்​றும் தலைமறைவாக உள்ள முத்​துக்​குமார் உள்​ளிட்​டோரின் தொடர்​பு​கள் குறித்​தும் விசா​ரணை விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்​துக்​குமார் மூலம் துணிக்​கடை அதிபர் சண்​முகபி​ரியா என்​பவருக்கு பணப்​பரிவர்த்​தனை நடந்​துள்​ள​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்டு குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டது. தொடர்ந்து, சண்​முகப்​பி​ரியா​வுக்கு சொந்​த​மான நீலாங்​கரை வீட்​டில் ஏற்​கெனவே சோதனை நடத்​தப்​பட்​டது.

    இந்​நிலை​யில், பெருங்​குடி​யில் உள்ள அவரது வீட்​டில் வேறு நபர்​கள் வசித்து வரு​வ​தால், அங்கு முக்​கிய ஆவணங்​கள் ஏதேனும் கிடைக்​குமா என்ற கோணத்​தில் நேற்று மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். பல மணி நேரம் நடை​பெற்ற இந்த சோதனை​யில், அங்​கிருந்து கோடிக்​கணக்​கில் பணம் மற்​றும் வங்​கிப் பணம் பரிவர்த்​தனை ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. ஆனால், இதை போலீ​ஸார் உறுதிப்​படுத்​த​வில்லை.

    இருப்​பினும், பெண் தொழில் அதிபர் சண்​முகப்​பி​ரியா தொடர்​புடைய இடங்​களில் நடை​பெற்ற சோதனை வழக்​கின் அடுத்​தகட்ட நகர்​வுக்​கான முக்​கிய அம்​ச​மாக விசா​ரணை அதி​காரி​கள் நம்​பு​கின்​றனர். இதையடுத்து, அடுத்​தடுத்து மேலும் சிலர் கைது செய்​யப்​படுவதோடு, சந்​தேகத்​துக்​கிட​மான பல இடங்​களில் விரைவில் சோதனை நடத்​தப்​பட உள்​ள​தாக மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

    சண்​முகப்​பி​ரியா​வுக்​கும் அன்​பில் மகேஸுக்​கும் உள்ள வணிக மற்​றும் தனிப்​பட்ட தொடர்​பு​கள் என்ன என்​பதை மைய​மாக வைத்தே விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது. வசூலிக்​கப்​பட்ட நிதி, ஜவுளி வியாபாரம் போன்ற பிற வணிக வழிகளில் கைமாறியதா அல்​லது முதலீடு செய்​யப்​பட்​டதா என்ற கோணத்​தில் விசா​ரிக்​கப்​படு​கிறது. இதற்​கிடை​யில், தன்​மீதான குற்​றச்​சாட்​டுகளை சண்​முகப்​பி​ரியா போலீ​ஸாரிடம் தொடர்ந்து மறுத்து வரு​கிறார்.

    காவலில் எடுக்க மனு

    இதற்கிடையே புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள அன்​பில் மகேஸ் தரப்​பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலை​யில் ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

    அதே வேளையில், அவரை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரி சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதில் கூறியுள்​ள​தாவது:

    கும்​பகோணம் தீ விபத்து சம்​பவத்​துக்​குப் பிறகு எந்த தனியார் பள்​ளிக்​கும் நிரந்​தர அங்​கீகாரம் வழங்​கப்​படுவது இல்லை. ஆனால், கட்சி நிதி என்று கூறி ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்​துள்​ளனர். இந்த வழக்​கில் தலைமறைவாக உள்ள முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரும், அன்​பில் மகேஸும் நண்​பர்​கள், ஒன்​றாகப் படித்​தவர்​கள். அவர்​கள் இரு​வருக்​கும் இடை​யி​லான நிதி பரிவர்த்​தனை தொடர்​பு​கள், யார் யாரிடம் எவ்​வளவு பணம் பெறப்​பட்​டுள்​ளது, வேறு யார், யாருக்கு இதில் தொடர்பு உள்​ளது. யார், யார் இதில் இடைத் தரகர்​களாக செயல்​பட்​டுள்​ளனர், வேறு பணப் பரிமாற்​றங்​கள் குறித்​தும் அன்​பில் மகேஸிடம் விரிவாக விசா​ரணை நடத்த வேண்டி இருப்​ப​தால் அவரை 5 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்​வாறு அதில் கோரப்​பட்​டுள்​ளது.

    அன்​பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எல்.எஸ்.சத்​தி​யமூர்த்தி முன்பு விசா​ரணைக்கு வர உள்ள நிலை​யில், அவரை காவலில் எடுத்து விசா​ரிக்​கக் கோரிய மனு குறித்து காவல்​துறை தரப்​பில் முறை​யிடப்​படும் என தெரி​கிறது.

    இதற்​கிடையே, பள்ளி நிர்​வாகி​களிடம் மோசடி செய்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட தமிழ்​நாடு தனியார் பள்​ளி​கள் சங்​கப் பொருளாள​ரும், முன்​னாள் எம்​எல்​ஏவுமான முத்​துக்​குமாரின் முன்​ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

  • செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

    செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

    கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு மாயமானார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    விசாரணையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இவ்வழக்கு கடந்த 21-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் தொடர்ந்து தீவிர விசாரணையில் உள்ளனர்.

    இதற்கிடையே, சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் உள்ளூரைச் சேர்ந்த மேலும் இரு இளைஞர்களிடம் போலீஸார் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பாக சில விவரங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

    அப்போது சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்துவதற்காக சிபிஐசிஐடி போலீஸாரின் ஒரு குழுவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.

     

  • தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் அக்.30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு செல்கிறார். அன்றைய தினம் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவர், தொடர்ந்து மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தவுள்ளார். அதன் பின்னர் பசும்பொன் சென்றடையும் அவர், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.