செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு மாயமானார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இவ்வழக்கு கடந்த 21-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் தொடர்ந்து தீவிர விசாரணையில் உள்ளனர்.

இதற்கிடையே, சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் உள்ளூரைச் சேர்ந்த மேலும் இரு இளைஞர்களிடம் போலீஸார் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பாக சில விவரங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

அப்போது சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்துவதற்காக சிபிஐசிஐடி போலீஸாரின் ஒரு குழுவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *