ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
மதுரை, அக். 31–
திண்டுக்கல் காந்திகிராம பல்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
அவருக்கு, கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணியிடம் ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார்.
எல்லோருக்கும் வாய்ப்பு
அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், பத்திரிகையாளர்களை ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. ஒரு கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராக ஆகும் போது, தமிழரும் பிரதமர் ஆகலாம்.
ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியா வல்லரசு ஆகும் என கூறினால் நம்பிக்கை இருக்காது. ஆனால், இப்போது இந்தியா வல்லரசு ஆகும் என சொன்னால் நம்புவர்.
அதே நம்பிக்கை தான் உலகின் நான்காவது வல்லரசாக இந்தியாவை உருவாக்கியுள்ளது. நிச்சயம் உலகின் முதல் வல்லரசு நாடாக இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்தடை
துணை ஜனாதிபதி பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, கோவிலில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, ‘‘அமைச்சரிடம் கேளுங்கள்,’’ என்றார்.
அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘துணை ஜனாதிபதி மாலை, 5:35 மணிக்கு கோவிலுக்கு வந்து, 6:25 மணிக்கு புறப்பட்டார். மதியம், 3:30 மணி முதல் கோவில் முழுதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
‘கோவில் மின் நிலையத்தில் மின் உதவி பொறியாளர் இருந்தார். தரிசனத்திற்கு பிறகு, துணை ஜனாதிபதி பத்திரிகையாளர்களை சந்தித்த போது, கோளாறு காரணமாக கோவிலுக்குள் மின் விநியோகம் தடைபட்டது. 2 நிமிடங்களில் மின்சாரம், ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்திற்கு மாற்றப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.
‘வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்பு’
‘‘நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டு புதுவாழ்வு பெற்றுள்ளனர்,’’ என, திண்டுக்கல் காந்திகிராம பல்கலை 39வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
விழாவுக்கு, பல்கலை வேந்தர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு, பதக்கங்கள், பட்டங்களை வழங்கி பேசியதாவது:
பிரதமர் மோடியின், ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற தொலைநோக்கு பார்வைக்கு, கிராமப்புற வளர்ச்சியே முதன்மை துாணாக உள்ளது. 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டு புதுவாழ்வு பெற்றுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், பொருளாதார மாற்றங்கள் போன்ற பல்வேறு சவால்களால் உலகம் மாற்றமடைந்து வருகிறது. இச்சூழலில், பட்டப்படிப்பு முடித்த மாணவர்களின் கல்வி, தங்களின் பொறுப்புகளை உணர்ந்து சமுதாயத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *