“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

“டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56% சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.

பல ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.

தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தேர்வுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எனத் தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த காலங்களில், அமைச்சர்கள் வரையில் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கியதான குற்றச்சாட்டுக்களே இதற்கு நேரடி சாட்சி.

இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நனவாக்க வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது மிகவும் கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வு முறையின் மீதும், அரசுப் பணி நியமனத்தின் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள, உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்துவதுமே, தமிழக இளைஞர்களுக்கு, மீண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *