வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நாளை (நவ.12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்கக்கடலில் (நவ.13) வெள்ளிக்கிழமை அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD), சென்னை மண்டல அலுவலகத்தால், தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், கிழக்குக் கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, மீன்பிடிப் படகுகள் அனைத்தும் (நவ.12) வியாழக்கிழமை இரவுக்குள் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், அப்படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகங்களுக்குத் திரும்பி, பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நவ.13 முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் (Fishing Tokens) வழங்கப்படாது. தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் நாட்டுப் படகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் நவ.12-க்குள் கரைக்குத் திரும்பி, தங்களது வழக்கமான மீன் இறங்குதளங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் வெளியிடப்படும் அறிவுரைகளை மீனவர்கள் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *