தமிழ்நாடு அரசு வங்கிக்கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி கொள்ளை – சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 22 கோடியே 10 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள பயனாளர் அடையாள எண் மற்றும் ரகசிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இந்த இணையதளத்தில் உள்நுழைந்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையில்தான் தற்போது சைபர் குற்றவாளிகள் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஊராட்சி வங்கிக்கணக்குகளில் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ. 14 கோடி பணம் திருடப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ. 5 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக்கணக்கிலிருந்து சுமார் ரூ. 3 கோடியே 10 லட்சமும் திருடப்பட்டுள்ளன. இதன்மூலம் மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ. 22 கோடியே 10 லட்சம் பணம் மாயமாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு வங்கிக்கணக்குகளில் இருந்து ஒரே மாதிரியான முறையில் பணம் திருடப்பட்டிருப்பதால், இதன் பின்னணியில் ஒருங்கிணைந்த சைபர் குற்றக் கும்பல் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடியில் குற்றவாளிகள் நேரடியாக வங்கிக்கணக்குகளை அணுகி பணத்தை எடுத்தார்களா? அல்லது அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் இணையதள போர்ட்டலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பரிவர்த்தனைகளை மேற்கொண்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வங்கிகளுக்கும் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் இணையதள போர்ட்டலில் இருந்த தொழில்நுட்பப் பாதுகாப்புக் குறைபாட்டை சைபர் குற்றவாளிகள் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் ஆய்வுசெய்த மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் இணையதளத் தொடர்புகளின் ஐபி முகவரிகளில் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்த இணையதள ஊடுருவல் தொடர்பான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த மோசடியில் வெளிநாடுகளில் செயல்படும் சைபர் குற்றவாளிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து இணையதள ஊடுருவல் நடைபெற்றிருந்தாலும் திருடப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றுவதற்கும் இந்தியாவில் உள்ள இடைத்தரகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பணத்தை மீட்பதில் உள்ள சவால்கள்

பொதுவாக இதுபோன்ற சைபர் மோசடிகளில் முதலில் ஒரு வங்கிக்கணக்குக்கு மாற்றப்படும் பணம் அடுத்தடுத்து பல்வேறு வங்கிக்கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பப்படும். இதனால் பணம் சென்றடைந்த இறுதிக்கணக்கைக் கண்டறிவதும் பணத்தை மீட்பதும் போலீசாருக்கு சவாலாக இருக்கும். எனவே அரசு கணக்குகளில் இருந்து திருடப்பட்ட பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதைத் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட இணையதள போர்ட்டலை உருவாக்கி நிர்வகித்து வரும் தொழில்நுட்பக் குழுவினரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அந்த இணையதளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன? பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? அதனை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதிகாரிகளின் உள்நுழைவு விவரங்கள் எவ்வாறு குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றன? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே புதுச்சேரியிலும் அரசு வங்கிக்கணக்குகளை மையமாக வைத்து இதேபோன்ற சைபர் மோசடி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி திருடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *