வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது

‘வங்கக்கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, ‘அர்னாப்’ புயலாக உருவானது. இது நாளை மாலை, ஆந்திரா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு முந்தைய, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டம் காரத்தோலுவு, கோவை மாவட்டம் ஒத்தகல்மண்டபம் பகுதியில், தலா, 16 செ.மீ., மழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டம், கொத்தவாச்சேரியில், 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, 5:30 மணிக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, ‘அர்னாப்’ என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் நேற்று மதியம் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு, 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.
புயலானது ஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து, கிழக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கே, 610 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுவடைந்தது.
எச்சரிக்கை
இன்று மிக தீவிர புயலாக, அதே பகுதியில் வலுவடையும். அதன்பின், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே மிக தீவிர புயலாக, நாளை மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 115 முதல், 125 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில், 140 கி.மீ., வேகத்திலும், சூறை காற்று வீசும். இதன் காரணமாக, கடலோர ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரளம் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதிகளில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை, தெற்கு கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இந்த வானிலை நிகழ்வுகளால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் பலத்த காற்றுடன், இன்றும், நாளையும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில், ‘அர்னாப்’ புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில், ‘அர்னாப்’ புயல் உருவாகி உள்ள நிலையில், சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *