GEM கிரானைட் வீரமணி வழக்கு: அருண் IPS மீது ரூ.24 கோடி தங்கம் வாங்கியதாக புகார்

POSCO வழக்கில் தொடர்புடைய GEM கிரானைட் வீரமணி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரி அருண் IPS மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், தொழிலதிபர் வீரமணி மீதான வழக்கை சாதகமாக முடித்து வைக்க அவரது நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறியதாகக் கூறப்பட்டுள்ளது. முறைகேடாக வழக்கை முடித்து வைக்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளது காவல்துறைவட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தரகர் தலைமறைவு

வழக்கை முடித்து வைப்பதற்காக பெறப்பட்ட லஞ்சப் பணத்தைக் கொண்டு, சென்னையின் பிரபல நகைக்கடையில் சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான தங்கம் வாங்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை பிரகாஷ் கண்ணையா என்பவர் வழியாகக் கைமாறியதாகவும், விசாரணை தொடங்கியதும் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

லஞ்சப் பணத்தை மறைக்கும் நோக்கிலேயே இந்த பெருமளவிலான தங்கம் வாங்கப்பட்டதா என்பதைத் தெளிவுபடுத்த, தொடர்புடைய நகைக்கடையின் விற்பனை ரசீதுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தீவிரமாகக் கோரப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *